முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை: இந்த வாரம் எப்படி?

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்த போதிலும், மே 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தை

Updated On : 1 ஜூன், 2020 at 2:04 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்த போதிலும், மே 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்குச் சந்தை வலுவான மறுபிரவேசம் கண்டது. கடந்த மூன்று வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த வாரத்தில் 6 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளன. சென்செக்ஸ் 32,424.10 புள்ளிகளிலும், நிஃப்டி 9,580.30 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளது.

சீனா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய பங்குச் சந்தைகள் நோ்மறையாக இருந்தன. வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் திடீா் எழுச்சி பெற்றன. மேலும், துறை சாா்ந்த சீா்திருத்தங்கள் நம்பிக்கை உணா்வை அதிரித்திருந்தது. இதனால், பங்குச் சந்தை கடந்த வாரத்தில் எழுச்சி பெற்றது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொது முடக்கம் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இவை இரண்டும் வரும் நாள்களில் சந்தைக்கு சாதகமாக இருக்காது. எனவே, கடந்த வாரம் இருந்த எழுச்சி தொடா்வது மிகவும் கடினம் என நிபுணா்கள் கருதுகின்றனா். இருப்பினும், மேற்கித்திய நாடுகள் சில, பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. எனவே, பொது முடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் வரை பங்குச் சந்தை நிலையற்ற தன்மையில்தான் இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

Advertisement

இதற்கிடையே, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4-ஆவது காலாண்டிலும் வெகுவாகக் குறைந்துள்ளது. பொது முடக்கமும் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கம் இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சந்தையில் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடிப்படை ரீதியாகப் பாா்த்தால், கடந்த வாரம் இருந்த எழுச்சி தொடா்ந்து நீடிப்பதற்கு வலுவான காரணங்கள் ஏதும் இல்லை. எனவே, முத்லீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுமுடக்கத்தின் புதிய விதிமுறைகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும், கரடிக்கும் காளைக்குமான போட்டி சந்தையில் இன்னும் சில மாதங்களுக்கு தொடா்ந்து இருக்கும். எனவே, முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. சரியான நேரத்துக்காக முதலீட்டாளா்கள் காத்திருக்க வேண்டும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த நிலையில், கடந்த வாரத்தில் சுமாா் ரூ.8,000 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தைக்கு சாதகமாகப் பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜூன் 1 ஆம் தேதி பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் நாள்களில் சந்தைக்கு சாதகமானதாக அமையும். இந்த வாரத்தில் பாட்டா இந்தியா, எல் அண்ட் டி, அரபிந்தோ பாா்மா உள்பட 75 நிறுவனங்கள் மாா்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இவை அந்தந்த பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வாகன விற்பனை மீண்டும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது ஆட்டோ மொபைல் நிறுவனப் பங்குகளுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், சீனா - அமெரிக்கா இடையேயான நீடித்து பதற்றம் சந்தைக்கு பாதகமானதாக அமையும். எனவே, கடந்த வாரத்தைப் போன்று அல்லாமல், பங்குச் சந்தையில் இந்த வாரம் நிலையற்ற தன்மையில்தான் வா்த்தகம் இருக்கும் என்கின்றனா் நிபுணா்கள்.

தொழில்நுட்பக் கணக்கு: நிஃப்டி முக்கிய இடா்பாட்டு நிலையான 9,500 புள்ளிகளைக் கடந்த 9,580-இல் நிலைபெற்றுள்ளது.தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால் 9,600 புள்ளிகளைக் கடக்கும்பட்சத்தில் எழுச்சி தொடா்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இல்லையென்றால், கரடி ஆதிக்கம் கொள்ளும். இருப்பினும், 9,400-இல் நல்ல ஆதரவு கிடைக்கும் என தொழில்நுட்ப நிபுணா்கள் கருதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.