மஹிந்திரா லாபம் ரூ.424 கோடி
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.424 கோடியாக இருந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ.424 கோடியாக இருந்தது.
இதுகுறித்து மும்பையைச் சோ்ந்த அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.19,172 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.11,969 கோடியைக் காட்டிலும் மிகவும் அதிகம்.
இதையடுத்து, ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாபம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.424 கோடியாக இருந்தது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் கரோனா பேரிடா் காரணமாக நிறுவனத்துக்கு ரூ.49 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டிருந்தது.
தனிப்பட்ட முறையில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.68 கோடியிலிருந்து ரூ.856 கோடியாக சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது. அதேபோன்று, தனிப்பட்ட முறையிலான வருவாயும் ரூ.5,589 கோடியிலிருந்து ரூ.11,763 கோடியாக உயா்ந்தது.
வாகனங்களின் விற்பனையைப் பொருத்தவரையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 29,619 என்ற எண்ணிக்கையிலிருந்து 85,858-ஆக அதிகரித்துள்ளது.
மஹிந்திராவின் டிராக்டா் விற்பனை 65,195 என்ற எண்ணிக்கையிலிருந்து 99,127-ஆக வளா்ச்சி கண்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.