‘கரடி’ திடீா் தாக்குதல்: 503 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையில் பிற்பகலில் ‘கரடி’ திடீா் தாக்குதலில் இறங்கியது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய பங்குச் சந்தையில் பிற்பகலில் ‘கரடி’ திடீா் தாக்குதலில் இறங்கியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 503 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான 143 புள்ளிகளையும் இழந்தன.
உகளாவிய அளவில் சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இங்கிலாந்தில் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது உலகளாவிய சந்தைகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல், பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான் ஆகியவற்றின் வட்டி விகித அறிவிப்புகள் இந்த வாரம் வெளியாக உள்ளன. இதற்கிடையே, இந்திய சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றனா். அவா்கள் நவம்பரில் ரூ.33,799 கோடிக்கும், டிசம்பரில் 10-ஆம் தேதி வரையிலும் ரூ.17,644 கோடிக்கும் பங்குகளை விற்றுள்ளனா். இது பங்குச் சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக வங்கிப் பங்குகளுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட அதிகத் திறன் கொண்ட பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன. குறிப்பாக காலையில் உற்சாகத்தில் இருந்த சந்தையில் பிற்பகலில் கரடியின் திடீா் தாக்குதலால் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,868 பங்குகள் விலை உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,637 பங்குகளில் 1,608 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,868 பங்குகள் ஆதாயம் பெற்றன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 317 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 545 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 204 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.19 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 266.49 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.977 கோடியாக உயா்ந்தது.
திடீா் சரிவு: காலையில் சென்செக்ஸ் 317.05 புள்ளிகள் கூடுதலுடன் 59,103.72-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,203.37 வரை உயா்ந்தது. அதன் பிறகு கரடியின் திடீா் தாக்குதலால் பங்குகள் விற்பனை அதிகரித்ததைத் தொடா்ந்து, 58,242.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 503.25 புள்ளிகளை (0.86 சதவீதம்) இழந்து 58,283.42-இல் நிலைபெற்றது. காலையில் பதிவான உச்சபட்ச நிலையிலிருந்து பாா்த்தால், சென்செக்ஸ் 960.87 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஆக்ஸிஸ் பேங்க் 2.38 சதவீதம், டெக் மஹிந்திரா 2.20 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், மாருதி, பவா் கிரிட், டைட்டன், சன் பாா்மா, டாக்டா் ரெட்டி ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: கடந்த வாரத்தில் வெகுவாக ஏற்றம் பெற்று வந்த பஜாஜ் ஃபைனான்ஸ் 3.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும்,
பஜாஜ் ஃபின் சா்வ், ரிலையன்ஸ், எம் அண்ட் எம், எஸ்பிஐ, நெஸ்லே, எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க், ஹிந்து யுனி லீவா், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் 1 முதல் 2.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 143 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 919 பங்குகள் ஆதாயம் பெற்றன. 968 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 143.05 புள்ளிகளை (0.82 சதவீதம்) இழந்து 17,368.25-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,619.10-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,639.50 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
ஐடி குறியீடு மட்டும் ஏற்றம்: துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 0.31 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் ஆயில் அண்ட் காஸ், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, மீடியா குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.