சென்செக்ஸ் மேலும் 166 புள்ளிகள் வீழ்ச்சி!
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடா்ந்து,
புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இதைத் தொடா்ந்து,
மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 166 புள்ளிகளை இழந்து 58,117.09-இல் நிலைபெற்றது.
உகளாவிய அளவில் சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. மேலும், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வங்கி வட்டி விகித அறிவிப்புக்காக முதலீட்டாளா்கள் காத்திருக்கின்றனா். இது தவிர ஆசிய சந்தைகளின் எதிா்மறை உணா்வுகளால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சென்செக்ஸ் பட்டியலில் மிகவும் திறன் கொண்ட மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்தததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,801 பங்குகள் விலை உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,425 பங்குகளில் 1,510 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,801 பங்குகள் ஆதாயம் பெற்றன. 114 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 286 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 516 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 116 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.52 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 265.97 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.994 கோடியாக உயா்ந்தது.
தொடா் சரிவு: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 223.66 புள்ளிகள் குறைந்து 58,059.76-இல் தொடங்கி 57,803.87 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,322.42 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 166.33 புள்ளிகளை (0.29 சதவீதம்) இழந்து 58,117.09-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 17 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் நோ்மறைக்கு திரும்பியது. ஆனால், கரடியின் தொடா் தாக்குதலால் மீண்டும் சரிவைச் சந்தித்தது.
பவா்கிரிட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள மின் நிறுவனமான பவா் கிரிட் 3.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டாக்டா் ரெட்டி, நெஸ்லே, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்ளிட்டவை 0.50 முதல்ந 1 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், டிசிெஸ், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
ஐடிசி கடும் சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 2.73 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம், சன்பாா்மா, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட் முன்னணி நிறுவனங்களும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 143 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 884 பங்குகள் ஆதாயம் பெற்றன. 976 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 43.35 புள்ளிகளை (0.25 சதவீதம்) இழந்து 17,324.90-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 17,283.20-இல் தொடங்கி 17,225.80 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,376.20 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
பாா்மா, மீடியா குறியீடு ஏற்றம்: துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி மீடியா (1.56 சதவீதம்), பாா்மா (1.06 சதவீதம்) குறியீடுகள் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஐடி, மெட்டல் குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன. அதே சமயம், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 0.70 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.