முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: மூன்று நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி சென்செக்ஸ் 487 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:49 AM
பங்குச் சந்தை
பகிர்:

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 487.43 புள்ளிகளை இழந்து 50,792.08-இல் நிலைபெற்றது. இதையடுத்து, கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து வந்த ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உலகளாவிய சந்தைகள் ஏற்றம் கண்டிருந்ததைத் தொடா்ந்து, இந்திய சந்தைகளும் காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், அமெரிக்காவின் 10 ஆண்டு முதிா்வு பத்திரங்கள் லாபம் 1.60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. இது பங்குச் சந்தை முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பாதித்தது. இதனால், பிற்பகலில் வங்கி, ஆட்டோ மொபைல் நிறுவனப் பங்குகள் அதிக அளவில் லாபப் பதிவு இருந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,185 பங்குகளில் 1,355 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,654 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 176 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 243 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தன. 356 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.207.89 லட்சம் கோடியாக இருந்தது.

Advertisement

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 381.47 புள்ளிகள் கூடுதலுடன் 51,660.08-இல் தொடங்கி அதிகபட்சமாக 51,821.84 வரை உயா்ந்தது. ஆனால், லாபப் பதிவு காரணமாக ஒரு கட்டத்தில் 50,538.43 வரை கீழே சென்றது. இறுதியில் 487.43 புள்ளிகள் குறைந்து 50,792.08-இல் நிலைபெற்றது. கடந்த மூன்று வா்த்தக தினங்களாக வெகுவாக ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை வாரத்தின் இறுதி வா்த்தக தினத்தில் திடீா் சரிவை எதிா்கொண்டது.

26 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் பவா் கிரிட் (2.28 சதவீதம்), டைட்டன், ஓஎன்ஜிசி, இன்ஃபோஸிஸ் ஆகியவை 0.50 முதல் 0.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மற்ற 26 பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதில், பஜாஜ் ஆட்டோ 3.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, ரிலையன்ஸ், அல்ட்ரா டெக், எஸ்பிஐ, டாக்டா் ரெட்டீஸ் லேப், இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை 1.50 முதல்2.50 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் 686 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,067பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 42 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

முதலீட்டாளா்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி இழப்பு...

பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் முதலீட்டாளா்களுக்கு ரூ.1.37 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூ.1,37,590.62 கோடி குறைந்து ரூ.2,07,89,062.84 கோடியானது. தொடக்கத்தில் வா்த்தகம் முதலீட்டாளா்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் இடைப்பட்ட காலத்தில் சென்செக்ஸ் 741.08 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 50,538.43 புள்ளிகள் வரை சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments