"கரடி' பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 396 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை "கரடி'-யின் பிடியில் சிக்கியது.
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை "கரடி'-யின் பிடியில் சிக்கியது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 396 புள்ளிகளை இழந்து 60,322-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 110 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் கரடி-யின் பிடி இறுகியது. நிறுவனங்கள் விலைகளை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் பணவீக்கம் அழுத்தம் மற்றும் அதன் விளைவாக தேவை மீதான தாக்கம் ஆகியவை குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படுவதால், வர்த்தகம் நிலையற்ற தன்மையில் இருந்ததாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டதும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சந்தை மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்தது: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,474 நிறுவனப் பங்குகளில் 1,602 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,729 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 190 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 40 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 362 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 240 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக இறுதியில் ரூ.269.72 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,66,53,079-ஆக உயர்ந்துள்ளது.
"கரடி' பிடி: காலையில் சென்செக்ஸ் 36.67 புள்ளிகள் கூடுதலுடன் 60,755.38-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,802.79 வரை உயர்ந்தது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,199.56 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தை கரடியின் பிடியில் சிக்கித் தவித்தது.
மாருதி சுஸுகி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 7.31 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம் 3.44 சதவீதம், டெக் மஹிந்திரா 1.56 சதவீதம் உயர்ந்தன.
மேலும், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
ரிலையன்ஸ் கடும் சரிவு: அதே சமயம், மார்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 2.58 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதேபோல, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, சன்பார்மா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேப், ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல் உள்ளிட்டவையும் 1 முதல் 2.30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோட்டக் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 110 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 819 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,001 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,127.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,132.65 வரை உயர்ந்தது. பின்னர், 17,958.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 110.25 புள்ளிகளை (0.61 சதவீதம்) இழந்து 17,999.20-இல் நிலைபெற்றது.
ஆட்டோ குறியீடு முன்னேற்றம்: தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.48 சதவீதம், ஐடி குறியீடு 0.49 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.14 சதவீதம் சரிந்தது.
மேலும், நிஃப்டி பார்மா, பேங்க், பிரைவேட் பேங்க், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
ரூபாய் மதிப்பு 74.37
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து 74.37-இல் நிலைத்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காணொலி மூலமான சந்திப்புக்குப் பிறகு ஆசிய கரன்ஸிகள் ஆதாயம் கண்டது ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு வலு சேர்த்தது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய் பேரல் 82.62 டாலர்
சர்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.69 சதவீதம் அதிகரித்து 82.62 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.