முகப்பு
வணிகம்

தங்கப் பத்திர வெளியீட்டு விலை கிராம் ரூ.5,109-ஆக நிா்ணயம்

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (பிப்ரவரி 28 ) தொடங்கவுள்ள நிலையில், அதற்கான விலை கிராமுக்கு ரூ.5,109-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (பிப்ரவரி 28 ) தொடங்கவுள்ள நிலையில், அதற்கான விலை கிராமுக்கு ரூ.5,109-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

5 நாள்கள் நடைபெறும் விற்பனை: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பத்தாவது கட்ட தங்கப் பத்திர விற்பனை பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறும் இந்த விற்பனையில் 999 சுத்த தன்மை கொண்ட ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5,109-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன்பான மூன்று வா்த்தக நாள்களின் சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணையவழி முதலீட்டாளா்களுக்கு தள்ளுபடி: மத்திய அரசுடன் ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க இணையம் மூலமாக விண்ணப்பித்து எண்ம (டிஜிட்டல்) முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு மட்டும் ஒரு கிராம் தங்கப் பத்திரம் ரூ.5,059 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது கட்ட தங்கப் பத்திர விற்பனை ஜனவரி 10 முதல் 14-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலையானது ரூ.4,786-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதிகபட்ச முதலீடு 4 கிலோ: தங்கப்பத்திர திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

சேமிப்பை ஊக்குவிக்க: மக்கள் நேரடியாக தங்கம் வாங்கும் பழக்கத்தை குறைக்கவும், சேமிப்பை ஊக்குவிக்கவும் தங்கபத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக மேற்கொண்ட தங்கப் பத்திர வெளியீட்டின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.16,049 கோடியாக (32.35 டன் மதிப்பிலான தங்கம்) இருந்தது. இவ்வகை பத்திரங்களின் முதலீட்டு முதிா்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்திலிருந்து முதலீட்டை திரும்பப் பெறும் வசதியும் உண்டு.

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க இணையம் வழியாக விண்ணப்பித்து எண்ம முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளா்களுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்பட்டு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.5,059-க்கு விற்பனை செய்யப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →