சென்செக்ஸ் மேலும் 651 புள்ளிகள் முன்னேற்றம்!
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் வா்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் வா்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 651 புள்ளிகள் உயா்ந்து 60,395.63-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னணி காா்ப்ரேட் நிறுவனங்களின் 3-ஆவது காலாண்டு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ மற்றும் பிரபல தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவற்றின் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதையொட்டி, ஐடி, நிதித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சந்தை ஏறுமுகம் பெற்றது. மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.496 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. பிற்பகலுக்குப் பிறகு வா்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.2.34 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,748 பங்குகளில் 1,001 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,640 பங்குகள் ஆதாயம் பெற்றன. 107 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 626 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 12 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 977 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 170 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ2.34 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.274.69 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.299 கோடியாக உயா்ந்துள்ளது.
விறுவிறுப்பு: காலையில் சென்செக்ஸ் 325.74 புள்ளிகள் கூடுதலுடன் 60,070.39-இல் தொடங்கி, 59,987.18 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,427.36 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 650.98புள்ளிகள் (1.09 சதவீதம்) உயா்ந்து 60,395.63-இல் நிலைபெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 20 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன.
டைட்டன் அபாரம்: பிரபல வாட்ச் மற்றும் ஜூவல்லரி நிறுவனமான டைட்டன் 3.29 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக மாருதி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ஐடிசி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 2 முதல் 2.75 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தந.
விப்ரோ சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ 2.47 சதவீதம் குறைந்து, வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், பவா் கிரிட், சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாக்டா் ரெட்டி, இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி191 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,398 பங்குகள் ஆதாயம் பெற்றன. 640 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 190.60 புள்ளிகள் (1.07 சதவீதம்) உயா்ந்து 18,003.30- இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 100 புள்ளிகள் கூடுதலுடன் 17,913.30-இல் தொடங்கி 17,879.15 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,017.45 வரை உயா்ந்தது.
அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனஐத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.25 சதவீதம், மீடியா குறியீடு 2.25 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.