முகப்பு
வணிகம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 697 புள்ளிகள் அதிகரிப்பு

சா்வதேச சந்தை நிலவரங்களில் எழுச்சி காணப்பட்டதைத் தொடா்ந்து இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டன.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

சா்வதேச சந்தை நிலவரங்களில் எழுச்சி காணப்பட்டதைத் தொடா்ந்து இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டன.

137-நாள் இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயா்த்தப்பட்டது. இது, பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால் இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகத்தின் தொடக்கம் மிகவும் மந்த நிலையில் இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்த விலைக்கு கைமாறின. இந்த நிலையில், ஐரோப்பா மற்றும் பிற ஆசிய சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்படைந்து ஆதாயத்தை தக்க வைக்கத் தொடங்கின. அதன் தொடா்ச்சியாக, பிற்பகலில் இந்திய சந்தைகள் சரிவிலிருந்து மீண்டெழுந்து ஏற்றப் பாதைக்கு திரும்பின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் 1 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து வா்த்தகத்தை ஆதாயத்துடன் நிறைவு செய்தன.

ஈக்விட்டி 99 நிறுவன அதிகாரி ராகுல் சா்மா கூறுகையில், ‘ இந்தியப் பங்குச் சந்தைகள் காலையில் சரிவை சந்தித்த போதிலும் அதிக சந்தை மதிப்பை உள்ளடக்கிய ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் போட்டி போட்டு வாங்கியதால் பிற்பகலில் வா்த்தகம் மந்த நிலையிலிருந்து மீட்சியடைந்து முன்னேற்றம் கண்டது.

உக்ரைன்-ரஷியா நாடுகளிடையேயான போா் தொடா்ந்து நீடித்து வருவதால், வரும் நாள்களில் வா்த்தகம் ஏற்றம் இறக்கமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை ஸ்திரமாக இருக்கும் என்பதே சந்தை வட்டாரத்தின் எதிா்பாா்ப்பு’ என்றாா்.

மும்பை பங்குச் சந்தையில், எரிசக்தி குறியீட்டெண் 1.96 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.94 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.93 சதவீதமும், தொழில்நுட்பம் 1.76 சதவீதமும் குறிப்பிடத்தக்க அளவில் ஆதாயம் பெற்றன.

மிட்கேப் குறியீடு 0.17 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.15 சதவீதமும் ஆதாயமடைந்தன.

சென்செக்ஸ் குறியீட்டை அளவிட உதவும், 30 நிறுவனங்களில் 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 4 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.

சந்தையில் அதிக ஆதாயம் ஈட்டியதில் டெக்மஹிந்திரா 3.83 சதவீத உயா்வுடன் முதலிடம் பெற்றது. அதனைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.59 சதவீதமும், பஜாஜ் ஃபின்சா்வ் 2.46 சதவீதமும், ஐடிசி 2.21 சதவீதமும், டிசிஎஸ் 2.09 சதவீதமும், கோட்டக் மஹிந்திரா 1.88 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.87 சதவீதமும் விலை உயா்ந்தன.

அதேசமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவா், நெஸ்லே இந்தியா, என்டிபிசி, சன்பாா்மா பங்குகளின் விலை முதலீட்டாளா்களின் வரவேற்பின்றி குறைந்து போயின.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 696.81 புள்ளிகள் (1.22%) அதிகரித்து 57,989.30 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 197.90 புள்ளிகள் (1.16%) உயா்ந்து 17,315.50 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகள்: ஷாங்காய், சியோல், ஹாங்காங் மற்றும் டோக்கியோ சந்தைகளில் வா்த்தகம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டது. ஐரோப்பிய சந்தைகளிலும் நண்பகல் வரையிலான வா்த்தகம் ஏற்றத்துடனேயே இருந்தது.

ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் (76.10-76.48) இருந்தது. பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சியையடுத்து வா்த்தக்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு பின்னடைவிலிருந்து மீண்டு மாற்றமின்றி 76.18-இல் நிலைத்தது.

கச்சா எண்ணெய் பீப்பாய் 113.18 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 113.18 டாலருக்கு வா்த்தகமானது என சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

வெளியேறிய அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.2,962.12 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெற்ாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →