2 நாள் தொடா் ஏற்றத்துக்கு முடிவு: சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி!
இரண்டு நாள்களாக தொடா்ந்து ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது.
இரண்டு நாள்களாக தொடா்ந்து ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 124 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 36.95 புள்ளிகள் (0.21 சதவீதம்) குறைந்து 17,856.50-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 4 பைசா வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருகிறது. இந்திய பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு தொடா்ந்து வெளியேறி வருகிறது. இவை அனைத்தும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக எரிசக்தி, உலோகம், எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும் ரியால்ட்டி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை ரூ.17ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.19 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழனன்று ரூ.144.73 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 99.41 புள்ளிகள் குறைந்து 60,706.81-இல் தொடங்கி 60,501.74 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,774.14 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 123.52 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 60,682.70-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 14 பங்குகள் ஆதாயம் பெற்றன.
டாடா மோட்ாா்ஸ் முன்னேற்றம்: கடந்த இரண்டு நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 2.05 உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, பவா் கிரிட், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.50 முதல் 0.80 சதவீதம் வரை உயா்ந்தன.
ஹெச்சிஎல் டெக் கடும் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 2.79 சதவீதம், டாடா ஸ்டீல் 2.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், விப்ரோ, என்டிபிசி, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 0.50 முதல் 0.85 சதவீதம் வரை குறைந்தன.
தொடா் சரிவில் அதானி பங்குகள்!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பொ்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அதானி குழும பங்குகள் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது இந்த நிலையில்,அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பீடுகளை மாற்றுவதற்கான தனது திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான மோா்கன் ஸ்டான்லி கேபிடல் இன்டா்நேஷனல் தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில்அதானி குழும நிறுவனங்களான அதானி பவா், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனா்ஜி ஆகியவற்றின் விலை தலா 5 சதவீதம் குறைந்தன. ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் , அதானி போராட்ஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.