வாழ்நாள் வரலாற்றில் உச்சத்தில் நிறைவு பெற்ற பங்குச் சந்தை!
சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: 79,000 புள்ளிகளைத் தாண்டியது!
மும்பை: உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்த காரணத்தால், இன்றைய பங்குச் சந்தை உற்சாகத்தில் தொடங்கியது.
இன்போசிஸ், ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய ப்ளூ சிப் பங்குகள், வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெறுகியதால் சென்செக்ஸ் வரலாற்று சிறப்புமிக்க 79,000 புள்ளிகளைத் தாண்டியது. நிஃப்டி இன்று வாழ்நாள் உச்சமான 24,044.50 புள்ளிகளைத் தொட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243.18 புள்ளிகளில் வர்த்தகமானது. பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நஃபிட்டி 50 முறையே 79,396.03 என்ற வாழ்நாள் உச்சத்தை எட்டியது. நிஃப்டி பேங்க் குறியீடும் 53,180.75 என்ற புதிய சாதனை உச்சத்தைத் தொட்டது.
ஆக்ஸிஸ் வங்கி, பேயர் கிராப்ஸ்சைன், பார்தி ஏர்டெல், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆயில் இந்தியா, பிபி ஃபின்டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், வோடபோன் ஐடியா, வேர்ல்பூல், சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பங்குகள் இன்றைய பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டது.
சென்செக்ஸ் டாப் 30 நிறுவனங்களில், நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பாளரான நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், சென்னையை தளமாகக் கொண்ட அதன் போட்டியாளரான இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 23 சதவிகித பங்குகளை சுமார் 1,885 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் வாங்குவதாகக் கூறியதை அடுத்து அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் சுமார் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
இன்போசிஸ், டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் லாபத்தால் இன்றய சென்செக்ஸ் சாதனை உச்சத்திற்கு சென்றது.
என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லார்சன் & டூப்ரோ, சன் பார்மா, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் மாருதி ஆகியவை பங்குகள் சரிந்து முடிவடைந்தது.
பெரும்பாலான துறைகள் இன்றைய வர்த்தகத்தில் லாபத்தைப் பதிவு செய்தன. அதே சமயம் ஐடி மற்றும் எரிசக்தி ஆகியவை அதிக லாபத்தை ஈர்த்தது என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மிட்கேப் பங்குகள் ஏற்ற-இறக்கத்திலும் வர்த்தகமான நிலையில், ஸ்மால்கேப் பங்குகள் அரை சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.3,535.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.