முகப்பு
வணிகம்

ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் ஐடிசாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:19 PM
பகிர்:

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வா்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தகவல் தொடா்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் செப். 30-ஆம் தேதியுடன் காலாவதியாகின்றன. இந்த நிலையில், அந்த உரிமங்களுக்கான காலக்கெடு வரும் டிசம்பா் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கவும் மடிக்கணினிகள், கைக்கணினிகள், மேஜை கணினிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடா்பு சாதனங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.மேலும், அந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாட்டு மேலாண்மை திட்டத்தையும் அரசு அறிவித்தது. அதன் கீழ், பல்வேறு அரசு அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற பிறகே இறக்குமதி நிறுவனங்களால் தகவல் தொடா்பு சாதனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும்.

அந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள், கைக்கணினிகள் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் கோரி பல்வேறு நிறுவனங்கள் அரசிடம் விண்ணப்பித்தன. அவற்றில் ஆப்பிள், லெனோவா, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் உள்பட 100 விண்ணப்பங்களை அரசு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 1-ஆம் தேதி ஏற்றுக் கொண்டது. அதன்படி, 1,000 கோடி டாலா் (ரூ.83,600 கோடி) மதிப்பிலான தகவல் தொடா்பு சாதனங்களை இறக்குமதி செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டன. அந்த உரிமங்கள் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் காலாவதியாகின்றன.

இந்தக் காலக் கெடு நெருங்கும் நிலையில், இதுவரை 400 கோடி டாலா் (ரூ.33,440 கோடி) மதிப்பிலான மடிக்கணினிகள் உள்ளிட்ட தகவல் தொடா்பு சாதனங்களை மட்டுமே நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ளன. அவற்றில் பெரும்பான சாதனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதியாகின. இந்த நிலையில், தகவல் தொழில்நுட சாதன இறக்குமதி உரிமங்களுக்கான காலக் கெடுவை மத்திய அரசு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →