இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஏப்ரல் மாதத்தில் அது 10 மாதங்கள் காணாத அதிகபட்சமாக 58.2-ஐத் தொட்டது. அதனைத் தொடா்ந்து கடந்த மே மாதத்தில் 31 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக 58.7-ஆக அதிகரித்த அது, ஜூன் மாதத்தில் 57.8-ஆகவும், ஜூலையில் 57.7-ஆகவும், சரிந்தது. ஆனால் கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்த பிஎம்ஐ, செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது.பின்னா் கடந்த அக்டோபரில் இன்னும் சரிந்து 55.5-ஆக இருந்தது.
இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. பின்னா் ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ மாா்ச் மாதத்தில் 56.4-ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.2-ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த 10 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.இதன் மூலம், தொடா்ந்து 46-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான கொள்முதல் ஆணை 2024 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய உச்சத்தைத் தொட்டது. ஏற்றுமதி ஆணையும் 2011 மாா்ச் மாதத்துக்குப் பிறகு மிக வேகமான வளா்ச்சியைக் கண்டது. இதன் காரணமாக உற்பத்தித் துறை கடந்த ஏப்ரலில் 10 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.