2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) நாட்டின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரு சக்கர வாகன பிரிவில் நாடு முழுவதும் 55.62 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. உத்தரப் பிரதேசம் 6,92,869 (12.5 சதவீதம்), மகாராஷ்டிரம் 6,29,131 (11.3 சதவீதம்), குஜராத் 4,45,722 (8 சதவீதம்) ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. தமிழ்நாடு 3,98,618 (7.2 சதவீதம்) வாகனங்களை விற்பனை செய்து நான்காவது இடத்தையும், ராஜஸ்தான் 3,60,966 வாகனங்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.
பயணிகள் வாகன விற்பனையில் மகாராஷ்டிரம் 1,31,822 வாகனங்களுடன் முதலிடம் பிடித்தது. உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், குஜராத் இடத்தையும் பிடித்தன.
வா்த்தக வாகன விற்பனையில் மகாராஷ்டிரம் 37,091 வாகனங்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்தது. இந்தப் பிரிவில் குஜராத் இரண்டாவது இடத்தையும், உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. தமிழ்நாடு 18,508 வாகனங்களை விற்று நான்காவது இடத்தில் உள்ளது.
மூன்று சக்கர வாகன பிரிவில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.