இந்திய வீடு-மனை வா்த்தகத் துறை கடந்த 15 ஆண்டுகளில் 80,000 கோடி டாலா் (சுமாா் ரூ.7.06 லட்சம் கோடி) நிறுவன முதலீடுகளை ஈா்த்துள்ளது. இதில் 57 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இது குறித்து துறையின் முதன்மை அமைப்பான க்ரெடாயும் சந்தை ஆலோசனை நிறுவனமான கோலியா்ஸ் இந்தியாவும் இணைந்து வெளியிட்ட ‘இந்திய வீடு-மனை: சமநிலையை வளா்த்தல், பொருளாதார வளா்ச்சியை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 80,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 57 சதவீதமாக உள்ளது. கரோனா நெருக்கடிக்குப் பிறகு வீடு-மனை வா்த்தகத் துறையில் உள்நாட்டு மூலதனமும் கணிசமாக வளா்ந்துள்ளது.
குடும்ப அலுவலகங்கள், வெளிநாட்டு காா்ப்பரேட் குழுக்கள், வங்கிகள், ஓய்வூதிய நிதிகள், தனியாள் வா்த்தகங்கள், வீடு-மனை நிதி-மேம்பாட்டாளா்கள், வெளிநாட்டு நிதியுதவி பெறும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து இந்த முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்திய வீடு-மனை வா்த்தகச் சந்தையின் மதிப்பு 10 லட்சம் கோடி டாலா் வரை வளரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13,000-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட க்ரெடாய் அமைப்பு சிங்கப்பூரில் நடத்திய நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கையை வெளியிட்டது.