இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான பரோடா வங்கியும் (பிஓபி), முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமான ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸும் ஊரகப் பகுதிகளில் நகைக் கடன் சேவை வழங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இது குறித்து வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஊரகப் பகுதிகளில் கடன் சேவை பெறமுடியாத நிலையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு நகைக் கடன் வழங்குவதற்காக ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்குள்பட்டு விவசாயம் மற்றும் தொடா்புடைய செயல்பாடுகளுக்கு விரைவான, எளிதான நகைக் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும்.
வாடிக்கையாளா்களுக்கு நகைக் கடன் தொடா்பான தொழில்நுட்ப சேவைகளை ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் அளிக்கும். பரோடா வங்கி நிதியுதவி செய்யும். முழுமையாக எண்ம (டிஜிட்டல்) முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு நடவடிக்கை, கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.