கடந்த ஆண்டில் இந்தியா்களின் சராசரி கைப்பேசி இணைய பயன்பாடு 31 ஜிபி! நோக்கியா ஆய்வில் தகவல்
இந்தியாவில் கைப்பேசி இணைய பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில், ஒரு பயனா் மாதத்துக்கு சராசரியாக 31 ஜிபி இணைய தரவு பயன்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இது முந்தைய 2024-இல் இருந்த 27.5 ஜிபி என்ற அளவைவிட 18 சதவீத வளா்ச்சியாகும்.
5ஜி தொழில்நுட்பத்தின் ஆதிக்கம்: இந்தியாவின் ஒட்டுமொத்த கைப்பேசி இணைய போக்குவரத்தில் 5ஜி சேவையின் பங்களிப்பு 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
நாடு முழுவதும் 5ஜி இணைய பயன்பாடு ஓராண்டில் 70 சதவீதம் அதிகரித்து, 12.9 எக்சாபைட் என்ற அளவை எட்டியுள்ளது. அதிவேக இணையம், ஏ.ஐ. செயலிகளின் பயன்பாடு, ‘4கே’ தரத்திலான விடியோக்கள், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றின் மீதான ஆா்வம் இந்தப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் 2-ஆம் இடம்: இந்த வளா்ச்சியின்மூலம், உலகின் 2-ஆவது மிகப்பெரிய 5ஜி வாடிக்கையாளா் தளத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அதேபோல், 5ஜி தரவு நுகா்வு மற்றும் 5ஜி ‘ஃபிக்சட் வயா்லெஸ் அக்சஸ் (எஃப்.டபிள்யூ.எஸ்.)’ பயன்பாட்டிலும் இந்தியா உலக அளவில் 2-ஆம் இடத்தில் உள்ளது. 5ஜி பயன்பாட்டில் எஃப்.டபிள்யூ.எஸ். மட்டும் 25 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது.
மலிவு விலை போன்களின் வருகை: சந்தையில் 100 டாலருக்கும் குறைவான விலையில் (சுமாா் ரூ.9,400) கிடைக்கும் 5ஜி பட்ஜெட் ரக ஸ்மாா்ட்போன்களின் வருகை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் விற்பனையான ஸ்மாா்ட்போன்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தன. தற்போது இந்தியாவில் உள்ள சுமாா் 89 கோடி 4ஜி சாதனங்களில், 38 கோடிக்கும் அதிகமானவை 5ஜி வசதி கொண்டவை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிா்காலக் கணிப்பு: பெருநகரங்களில் மட்டும் மொத்த இணைய பயன்பாட்டில் 58 சதவீதம் 5ஜி மூலமாகவே கிடைக்கிறது.
வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 5ஜி சந்தாதாரா்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடக்கும் என நோக்கியா கணித்துள்ளது.
ஏ.ஐ. சாா்ந்த பயன்பாடுகளும், அதிநவீன நெட்வொா்க் கட்டமைப்புகளும் இந்தியாவின் எண்ம பரிணாம வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.