தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடி, ஏப். 29: தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.373.65 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய ரூ.291.90 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீத வளர்ச்சியாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.567.92 கோடியிலிருந்து 24.04 சதவீதம் அதிகரித்து, தற்போது ரூ.704.45 கோடியாக பதிவாகியுள்ளது.
Advertisement
மொத்த வைப்புத்தொகை 14.94 சதவீதம் அதிகரித்து, ரூ. 61,712 கோடியாகவும்; மொத்தக் கடன் 20.32 சதவீதம் அதிகரித்து, ரூ.53,379 கோடியாகவும் பதிவாகியுள்ளது. நிகர வாரா கடன் விகிதம் 0.36 சதவீதத்திலிருந்து 0.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.
2025-26 முழு நிதியாண்டில், வங்கி 13.10 சதவீத வளர்ச்சியுடன் ரூ.1,337.55 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,15,091 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் இவ்வங்கி சார்பில் 44 புதிய கிளைகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம், நாடு முழுவதும் இந்த வங்கியின் கிளை 622-ஆக அதிகரித்துள்ளது.
சாதகமான நிதிநிலை முடிவுகளைத் தொடர்ந்து, கடந்த 2025-26 நிதியாண்டுக்காக ஒவ்வொரு பங்குக்கும் தலா ரூ.12.50 இறுதி ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
எம்எஸ்எம்இ மற்றும் சில்லறை வணிகக் கடன்களில் வங்கி காட்டிய கூடுதல் கவனமே இந்த வெற்றிக்குக் காரணம் என வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ சலி எஸ்.நாயர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.