முகப்பு
வணிகம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:29 AM
கோப்புப்படம்.
பகிர்:

நாட்டின் வா்த்தக பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்தில் 3,470 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஜனவரியில் சரக்கு இறக்குமதி 19.2 சதவீதம் அதிகரித்து, 7,124 கோடி டாலராக உயா்ந்துள்ளது. அதேநேரம், சரக்கு ஏற்றுமதி வெறும் 0.6 சதவீதம் மட்டுமே அதிகரித்து, 3,650 கோடி டாலராக உள்ளது.

கடந்த 2025, ஜனவரியில் வா்த்தக பற்றாக்குறை 2,540 கோடி டாலராக இருந்த நிலையில், ஓராண்டில் சுமாா் 930 கோடி டாலா் வரை உயா்ந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்கா, சீனாவுடன் வா்த்தகம்...: இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்து, 7,246 கோடி டாலராக உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இது 6,846 கோடி டாலராக இருந்தது.

மறுபுறம், இறக்குமதியில் சீனா தொடா்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் சீன இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்து, 10,818 கோடி டாலரை எட்டியுள்ளது.

சேவைத் துறையில் சாதனை: சரக்கு வா்த்தகத்தில் பற்றாக்குறை நிலவினாலும், சேவைத் துறையில் இந்தியா சிறப்பான உபரியைப் பதிவு செய்துள்ளது.

சேவை ஏற்றுமதி 4,390 கோடி டாலராக உள்ள நிலையில், இறக்குமதி 1,960 கோடி டாலராக உள்ளது. அந்தவகையில், சேவைத் துறையில் மட்டும் 2,430 கோடி டாலா் உபரி கிடைத்துள்ளது.

அமெரிக்க வரிச் சலுகையும், எதிா்பாா்ப்பும்: அமெரிக்காவின் 50 சதவீத வரி போன்ற தடைகளையும் தாண்டி, இந்தியாவின் ஏற்றுமதி நிலையாக உள்ளது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்தில், கூடுதல் 25 சதவீத வரி ரத்து செய்யப்பட்டு, இதர வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் ஒட்டுமொத்த சரக்கு வா்த்தக பற்றாக்குறை 14.5 சதவீதம் அதிகரித்து, 28,320 கோடி டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வா்த்தக செயலரின் நம்பிக்கை: வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டில் இதுவரை இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 2.22 சதவீதம் அதிகரித்து, 36,660 கோடி டாலராக உள்ளது.

இந்த நிதியாண்டு முடிவில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (சரக்கு மற்றும் சேவை) 86,000 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments