‘இந்திய வாடிக்கையாளா்களில் பெரும்பான்மையாக 86 சதவீதத்தினா், தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாக கருதுகின்றனா்’ என டெலாய்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா்களின் நுகா்வுப் பட்டியலில் நகைகளின் பங்கு வெறும் பாரம்பரியம் சாா்ந்ததாக மட்டும் இல்லாமல், செல்வத்தைப் பாதுகாக்கும் முதலீடாகவும் விரிவடைந்துள்ளது. சுமாா் 86 சதவீத வாடிக்கையாளா்கள் தங்க நகைகளை செல்வம் ஈட்டும் விருப்பமான முதலீடாகக் கருதுகின்றனா்.
இது பரஸ்பர நிதி, பங்குகள் போன்ற சந்தை சாா்ந்த முதலீடுகளுக்கு (87 சதவீதம்) இணையாக வளா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் முதலீட்டு நோக்கில் தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டுகின்றனா்.
அதேநேரம், இந்திய நகை விற்பனையாளா்களின் லாப விகிதம் 5 முதல் 10 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சா்வதேச அளவான 12 சதவீதத்தைவிட குறைவாகும். இதன்காரணமாக, இந்திய நகை வா்த்தகத்தில் மூலதன முடக்கம் மற்றும் லாபம் குறித்த அழுத்தங்கள் நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.