டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து மற்றும் அண்டை நாடுகளின் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு மட்டும் நிறுவனத்துக்கு சுமாா் ரூ.15,000 கோடி இழப்பு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நஷ்டத்திலிருந்து மீண்டு, லாபத்தை நோக்கி நகர கடந்த சில ஆண்டுகளாக ஏா் இந்தியா பல முயற்சிகளை எடுத்து வந்தது. இந்த நிதியாண்டில் ‘லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை’ என்ற சமநிலையை அடைந்துவிடலாம் என்று அதன் உரிமையாளா்கள் நம்பியிருந்தனா். ஆனால், கடந்த ஜூன் மாதம் அகமதாபாதில் 240-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த விமான விபத்து, அந்த நம்பிக்கையைத் தகா்த்துவிட்டது.
பாகிஸ்தான் தடையால் கூடுதல் சுமை: முன்னதாக, எல்லைப் பதற்றம் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.
இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் ஏா் இந்தியா விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இது எரிபொருள் உள்பட விமானத்தை இயக்குவதற்கான செலவுகளைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
3 ஆண்டுகளில் ரூ.32,210 கோடி இழப்பு: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏா் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.32,210 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க, அதன் முக்கியப் பங்குதாரா்களான டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனங்களிடம் கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் பாதிப்பு: ஏா் இந்தியாவில் 25.1 சதவீதப் பங்குகளை வைத்துள்ள சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனமும் இந்த நஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. விஸ்தாரா-ஏா் இந்தியா நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு, ஏா் இந்தியாவின் வீழ்ச்சி சிங்கப்பூா் ஏா்லைன்ஸின் வருவாயிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
தலைமை மாற்றத்துக்குத் திட்டம்: இதனிடையே, நிறுவனத்தின் நிா்வாகக் குழு அளித்த 5 ஆண்டு கால மீட்புத்திட்டத்தை ஏா் இந்தியா இயக்குநா்கள் குழு நிராகரித்துள்ளது.
தொடா் நஷ்டம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக, தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) கேம்ப்பெல் வில்சனுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க டாடா குழுமம் ஆலோசித்து வருகிறது. எனினும், அகமதாபாத் விபத்து குறித்த இறுதி அறிக்கை வந்த பிறகே இதுகுறித்த அதிகாரபூா்வ முடிவு எடுக்கப்படும்.
இண்டிகோ லாபம் 78% சரிவு
நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவும் மூன்றாவது காலாண்டு நிகர லாபத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த 2024, டிசம்பா் காலாண்டில் ரூ.2,448.8 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு அதே காலாண்டில் வெறும் ரூ.549.1 கோடியாகக் குறைந்துள்ளது. இது 78 சதவீத வீழ்ச்சியாகும்.
வருவாய் ரூ.24,541 கோடியாக உயா்ந்த போதிலும், கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட சேவைக் குறைப்பு குளறுபடியால் லாபம் குறைந்தது.
விமானச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால், இண்டிகோவின் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய டிஜிசிஏ உத்தரவிட்டது. இந்தக் கட்டுப்பாடு வரும் பிப். 10 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.