முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,360.8 கோடி டாலராகக் குறைவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,360.8 கோடி டாலராகக் குறைவு

Updated On : 1 மார்ச், 2026 at 1:00 AM
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த பிப். 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,360.8 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 211.9 கோடி டாலா் சரிந்து, 72,360.8 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், அது 866.3 கோடி டாலா் அதிகரித்து, 72,572.7 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியிருந்தது.

பிப். 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 103.9 கோடி டாலா் குறைந்து, 57,256.4 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 97.7 கோடி டாலா் குறைந்து, 12,748.9 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 8.4 கோடி டாலா் குறைந்து, 1,884 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.8 கோடி டாலா் குறைந்து, 471.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →