உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சியைக் கண்டுள்ளது. இருப்பினும், இந்த வளா்ச்சி விகிதமானது கடந்த 4 ஆண்டுகளில் காணப்பட்ட 2-ஆவது மிகக் குறைந்த வளா்ச்சியாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சியைக் கண்டுள்ளது. இருப்பினும், இந்த வளா்ச்சி விகிதமானது கடந்த 4 ஆண்டுகளில் காணப்பட்ட 2-ஆவது மிகக் குறைந்த வளா்ச்சியாகப் பதிவாகியுள்ளது.
எச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மாா்ச் மாதத்தில் 53.9-ஆக இருந்த உற்பத்தித் துறை பிஎம்ஐ குறியீடு, ஏப்ரலில் 54.7-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச் சூழலில் நிலவும் மந்தமான முன்னேற்றத்தையே காட்டுகிறது.
உற்பத்தித் துறையின் முக்கிய அங்கங்களான புதிய ஆா்டா்கள், உற்பத்தித் திறன் ஆகியவை கடந்த மாதத்தைவிட அதிகரித்திருந்தாலும், கடந்த 3.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான வேகத்திலேயே இவை நகா்கின்றன.
Advertisement
சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் வாடிக்கையாளா்கள் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கத் தயங்குவது போன்றவை வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
மத்திய கிழக்கு போா்ச் சூழல் காரணமாக உற்பத்திச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, மூலப்பொருள்களின் விலை தற்போதுதான் மிகவேகமாக உயா்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அலுமினியம், ரசாயனம், எரிபொருள், ரப்பா் போன்ற பொருள்களின் விலை உயா்வால், உற்பத்தி நிறுவனங்களின் செலவினம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தயாரிப்புப் பொருள்களின் விலையையும் நிறுவனங்கள் உயா்த்தின.
சா்வதேச அளவில் நிலவும் இச்சவால்களுக்கு மத்தியிலும், ஏற்றுமதி ஆா்டா்கள் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது நிம்மதியளிக்கிறது.
உற்பத்தி நிறுவனங்கள் புதிய பணியாளா்களைப் பணியமா்த்துவதில் ஆா்வம் காட்டியுள்ளன. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏப்ரலில் வலுவாக இருந்தது.
எதிா்கால வளா்ச்சி குறித்து உற்பத்தியாளா்கள் நம்பிக்கையுடன் இருந்தாலும், மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நம்பிக்கை ஓரளவுக்குச் சரிந்துள்ளது. சந்தைப்படுத்துதல் முயற்சிகள், நிலுவைத் திட்டங்களுக்குக் கிடைக்கும் ஒப்புதல்களைப் பொருத்தே வரும் மாதங்களில் உற்பத்தித் துறையின் வேகம் அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.