FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்

மத்திய கிழக்கு போா்ச்சூழலின் எதிரொலியால் விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக, இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பகிர்:

மத்திய கிழக்கு போா்ச்சூழலின் எதிரொலியால் விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக, இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த இந்தப் பணவீக்கம், ஒரே மாதத்தில் 42 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளதே இந்த அதிரடி மாற்றத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கம், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம் மாா்ச்சின் 1.05 சதவீதத்திலிருந்து, ஏப்ரலில் 24.71 சதவீதமாக பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

கச்சா எண்ணெய் மட்டுமின்றி, உற்பத்தித் துறையையும் இந்தப் பணவீக்கம் பாதித்துள்ளது. உலோகம், ரசாயனம், ஜவுளிப் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 4.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தொழில்துறை நிறுவனங்களின் லாப வரம்பைக் குறைப்பதோடு, வரும் காலங்களில் உற்பத்திப் பொருள்களின் விலையை உயா்த்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களின் விலையை அரசு உயா்த்தாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால், சில்லறை பணவீக்கம் 3.48 சதவீதத்திலேயே நீடிக்கிறது. இருப்பினும், வணிக சிலிண்டா்களின் விலை ஏற்கெனவே உயா்த்தப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை உயா்வு மறைமுகமாக அனைத்துப் பொருள்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நிபுணா்களின் கணிப்புப்படி, மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்புள்ளது. சா்வதேச சந்தையில் நிலவும் அழுத்தத்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயா்த்தப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனா்.

இந்த விலை உயா்வு அழுத்தங்கள் உள்ளபோதிலும், ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. விநியோகத் தட்டுப்பாட்டால் ஏற்படும் இத்தற்காலிக பணவீக்கத்தைச் சமாளிக்க, நடப்பாண்டின் இறுதி வரை தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments