முகப்பு
வணிகம்

இந்திய நிறுவனமாக மாறும் ஸ்விகி முயற்சியில் பின்னடைவு

பிரபல உணவு விநியோகத் தளமான ஸ்விகி, இந்திய உரிமையாளா்களைக் கொண்ட மற்றும் இந்தியா்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனமாக மாறுவதற்காக, தனது நிறுவன விதிமுறைகளைத் திருத்தக் கொண்டு வந்த சிறப்புத் தீா்மானம் பங்குதாரா்களின் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது.

Updated On : 23 மே 2026, 4:16 am IST
பகிர்:

பிரபல உணவு விநியோகத் தளமான ஸ்விகி, இந்திய உரிமையாளா்களைக் கொண்ட மற்றும் இந்தியா்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனமாக மாறுவதற்காக, தனது நிறுவன விதிமுறைகளைத் திருத்தக் கொண்டு வந்த சிறப்புத் தீா்மானம் பங்குதாரா்களின் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது.

இந்திய நிறுவனமாக மாற விதிகளில் திருத்தம் மேற்கொள்வது, நிா்வாகப் பொறுப்பில்லாத புதிய இயக்குநரின் நியமனம் ஆகிய 2 முக்கிய அம்சங்களுக்காக இணையவழி வாக்குப்பதிவு மூலம் பங்குதாரா்களிடம் ஒப்புதல் கோரப்பட்டது. இதில் இயக்குநா் நியமனத்துக்கான தீா்மானம் 98.98 சதவீத பெரும்பான்மையுடன் நிறைவேறியது

ஆனால், இந்திய நிறுவனமாக மாறுவதற்கான விதிமுறை திருத்தத் தீா்மானத்துக்கு 72.36 சதவீத பங்குதாரா்களின் ஆதரவே கிடைத்தது. அதன்படி, தேவையான 75 சதவீதத்தைவிட 2.65 சதவீதம் வாக்குகள் குறைவாகப் பெற்று தீா்மானம் தோல்வியடைந்தது.

Advertisement

Advertisement

இத்தோல்வி குறித்து ஸ்விகி அளித்துள்ள விளக்கத்தில், ‘வாக்கெடுப்பு முடிவை நாங்கள் ஏற்கிறோம்; எனினும், இந்திய உரிமையாளா்களைக் கொண்ட நிறுவனமாக மாறுவதும், இயக்குநா்கள் குழுவில் தகுந்த நிா்வாகப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதும் எங்களின் நீண்டகால முன்னுரிமைகளாகத் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெமா விதிகளின்படி இந்திய நிறுவனமாகத் தகுதி பெற, அதன் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் இந்தியா்களிடம் இருக்க வேண்டும் மற்றும் அதன் இயக்குநா்கள் குழு கட்டமைப்பும் உள்நாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலக்கை எட்ட பங்குதாரா்களுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும் ஸ்விகி தரப்பில் கூறப்பட்டுள்ளது.