ஜெயலலிதா போடும் கணக்கு?
திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கூட்டங்களைக் கூட்டுவது கைவந்த கலை. கூட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் அவர் வல்லவர். அரசியல் எதிரிகளை அஞ்சவைக்கவும் பொதுமக்களை மிரளவைக்கவும் கூட்டத்தை ஒரு கருவியாக
திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கூட்டங்களைக் கூட்டுவது கைவந்த கலை. கூட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதில் அவர் வல்லவர். அரசியல் எதிரிகளை அஞ்சவைக்கவும் பொதுமக்களை மிரளவைக்கவும் கூட்டத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்துவார். ஆனாலும், கூட்டத்தை ஒருபோதும் அவர் நம்பியதில்லை. கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்று தன் சகாக்களிடம் அடிக்கடிச் சொல்வார்.
அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் அப்படித்தான். அவருக்கும் கூட்டத்தில் ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. அரசியல் கூட்டங்கள் எப்படியெல்லாம் கூட்டப்படுகின்றன என்பதன் பின்னணியை அறிந்தவர் அவர். அதனாலேயே, தேர்தல் காலங்களிலும்கூட பொதுக்கூட்டங்களைத் தவிர்த்து மக்கள் கூடும் இடங்களில் பேசிக்கொண்டே செல்லும் வகையிலேயே தன் பிரசாரத் திட்டத்தை அவர் அமைத்துக்கொள்வார்.
ஆனால், இப்போது ஜெயலலிதா கூட்டங்களை அணுகும் முறை வித்தியாசப்படுகிறது. அவருடைய அரசியல் எதிரி கருணாநிதியின் பாணியில் கூட்டங்களை ஓர் ஆயுதமாக அவர் கையில் எடுக்கிறார். தன்னுடைய அரசியல் எதிரிகளை அஞ்சவைக்கவும் பொதுமக்களை மிரளவைக்கவும் கூட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.
Advertisement
இந்தப் பாணியில் ஜெயலலிதாவுக்கு முன்னோடியான கருணாநிதி இப்போது மிரள்கிறார். அதிமுக நடத்தும் கூட்டங்கள் திமுகவைச் சங்கடத்துக்குள்ளாகின்றன; பதற்றத்துக்குள்ளாக்குகின்றன. பதைபதைப்பில் அரசியல் களத்தில் சொதப்ப ஆரம்பித்திருக்கிறது திமுக.
கோவையிலும் சரி, திருச்சியிலும் சரி, மதுரையிலும் சரி; அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு செய்தியைத் திரும்பத்திரும்ப கூறினார் ஜெயலலிதா:
""நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும்.''
மதுரையில் இன்னும் ஒருபடி மேலே போனார்:
""என் கணக்கு தப்பாது.''
பொதுவாக, ஜெயலலிதா தனக்கு உரிய மதிப்பு கிடைக்காத இடத்தைப் பொருட்படுத்தப்படுத்தமாட்டார். அவருடைய தனிப்பட்ட வாழ்விலும் சரி; பொதுவாழ்விலும் சரி. சுயமரியாதையை சமரசம் செய்துகொள்ளாதவர் அவர். ஆனால், கூட்டணிக்காக மறைமுகமாகவும் நேரடியாகவும் காங்கிரஸýக்கு பல முறை அவர் அழைப்பு விடுத்தும் காங்கிரஸ் தரப்பிலிருந்து நேரடியாக ஆக்கபூர்வமான பதில்கள் ஏதும் கிடைக்காத நிலையில், மீண்டும் மீண்டும் காங்கிரûஸ நோக்கி ஜெயலலிதா கையசைப்பது ஏன்? உண்மையில் அவர் போடும் கணக்குதான் என்ன?
தமிழகத்தையே குழப்பிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்குப் பின் பெரிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள். ஜெயலலிதா இப்போது போடும் கணக்கு கூட்டணிக்கானது அல்ல; அவர் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க திட்டம் வகுத்துவிட்டார். உண்மையில் ஜெயலலிதா இப்போது ஆடும் ஆட்டம் திமுகவுக்கு எதிரான ஓர் உளவியல் யுத்தம் என்று கூறுகிறார்கள் அவர்கள்.
அதிமுக மீண்டும் மீண்டும் காங்கிரஸýக்கு அழைப்பு விடுக்கும்போது காங்கிரஸில் சலசலப்பு ஏற்படும். அங்கிருந்து கிளம்பும் குரல்கள் அதிமுக ஆதரவுக் குரல்களாகவும் திமுக எதிர்க்குரல்களாகவும் ஒலிக்கும். தேர்தலில் கூடுதல் தொகுதிகளையும், மாநில ஆட்சியில் பங்கையும் கேட்கும் குரல்களாக மாறும். எப்படியும் காங்கிரûஸத் தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடியில் இருக்கும் திமுக காங்கிரஸிடத்தில் கூடுதல் கனிவுடன் நடந்துகொள்ளும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்படும். இதன் விளைவாக கூட்டணியில் கணிசமான இடங்களை காங்கிரஸிடம் திமுக இழக்க நேரிடும். தமிழக சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மை எண்ணிக்கைக்கான "118' என்ற இலக்கை நோக்கிய திமுகவின் பயணம் நெருக்கடிக்குள்ளாகும்.
ஆக, அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தாலும் சரி; திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தாலும் சரி; திமுக பலவீனமாகும். இதை எதிர்பார்த்தே ஜெயலலிதா காய் நகர்த்துகிறார். இந்த ஆட்டத்தை யார் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ காங்கிரஸ் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறது. அதனாலேயே திமுகவுக்குத் தலையையும் அதிமுகவுக்கு வாலையும் காட்டிக்கொண்டே அதன் இளைய தலைமுறைத் தலைவர்கள் மூலமாக பேரவைத் தேர்தலில் 80 இடங்கள் என்ற இலக்குடன் பேரத்தைத் தொடங்கியிருக்கிறது. ராகுலைக் காட்டி திமுகவை அச்சுறுத்துகிறது. சோனியாவின் சமீபத்திய தமிழகப் பயணத்தின்போது விமான நிலையத்துக்குச் சென்று சோனியாவைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் திமுக தலைமைக்கு ஏற்பட்டதும் இந்தப் பின்னணியிலேயே என்று தில்லி அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சரி, இந்தக் கணக்கெல்லாம் தேர்ந்த அரசியல்வாதியான கருணாநிதிக்குத் தெரியாதா? தெரியும்.
கருணாநிதிக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை என்கிறார்கள்.
மத்திய ஆட்சியைப் பகைத்துக்கொள்வதை திமுகவால் இப்போதைக்குக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இதைத் தெரிந்துகொண்டே அதிமுகவும் காங்கிரஸýம் காய் நகர்த்துகின்றன. ஜெயலலிதா போடும் கணக்கு இப்போது புரிகிறதா என்று கேட்கிறார்கள் அவர்கள்; புரிகிறதா?