முகப்பு
கனவுக்கன்னிகள்

சாவித்ரி-16. பிரிவின் உச்சம்! பிராப்தம்!

ஜெமினியைப் பார்க்கப் படப்பிடிப்புகளுக்குச் செல்வது சாவித்ரியின் பழக்கம். ஜெமினியை தேடி தெலுங்கு ஷூட்டிங்கில் இருந்து, மேக் அப்போடு வந்த

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:07 PM
பகிர்:

ஜெமினியைப் பார்க்கப்  படப்பிடிப்புகளுக்குச் செல்வது சாவித்ரியின் பழக்கம். ஜெமினியை தேடி தெலுங்கு ஷூட்டிங்கில் இருந்து, மேக் அப்போடு வந்த சாவித்ரியிடம், டைரக்டர் ஸ்ரீதர் கேட்டார்.

உங்க பிராப்தம் எப்ப ரிலீஸ்?

‘அதுக்கு எப்ப பிராப்தம் இருக்கோ அப்ப.’ என்று சொல்லிச் சிரித்தார் சாவித்ரி. வேறு வழி?

சாவித்ரி சிவாஜியின் தம்பி வி.சி.ஷண்முகத்திடம், கணேசனின் கால்ஷீட் கேட்டு அலைவது வாடிக்கையானது. அப்படியும் நேரம் நிறையவே மிச்சம் இருந்தது.

இரவில் சாவித்ரியின் வீட்டில் தங்கி, விடியலில் அங்கேயே மேக் அப் போட்டு ஷூட்டிங் புறப்படுவது, ஜெமினியின் அன்றாட இயல்பு. பிராப்தம் ஏற்படுத்திய சிக்கலால் அவர்களிடையே சீனப் பெருஞ்சுவர் எழும்பியது.

தனியாகவே சென்று சஃபையர் தியேட்டரில், நாலு மணி காட்சியில் ஆங்கிலப் படம் பார்த்தார் சாவித்ரி.

ஜோதி லட்சுமி எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவர் வீட்டுக்குப் போய் சீட்டு விளையாடினார். கேட்காமலே ஏகப்பட்ட அறிவுரைகள் ஜோதியின் காதுகளை நிரப்பின.

‘உனக்கு நீச்சல் தெரியுமா...?  தெரியலன்னா என் வீட்டுக்கு வா. அங்க பெரிய நீச்சல் குளம் இருக்கு. டைம் கிடைக்கறப்ப வந்து ஸ்விம் பண்ணு. உடம்பை ஸ்லிம்மா வெச்சுக்க. வெறும் கிளாமர் ரோல் பண்ணாம கேரக்டர்களும் செலக்ட் செஞ்சி பண்ணு. வரட்டுமா. ஆல் தி பெஸ்ட்!’

ஜோதி இன்ப அதிர்ச்சியில் வியர்த்து நின்றார்.

ஓர் ஆடவன் ஸ்த்ரீ லோலனாக அலைவதைப் போல் ஒரு பெண்ணும் அவனைக் கண்டித்து ஒழுங்குபடுத்த இயலாத சூழலில்,  ஆற்றாமையின் விளிம்பில், விரக்தியில் தானும் தவறுகளைச் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு, சாவித்ரியின் வாழ்க்கை நிகழ்வுகள் பொருத்தமான எடுத்துக் காட்டு.

மது. மாது. ரேஸ் உள்ளிட்ட லாகிரிகள் நீங்கலாக ஜெமினி மனத்தாலும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவர். அதை வேறு யாரும் சொன்னதில்லை. அவரே ஒவ்வொரு நேர்காணலில் தவறாமல் சொல்லி இருக்கிறார்.

 ‘நான் கடவுளுக்கும் கூட பயப்பட மாட்டேன். ஆண்டவன் தான் என்னைப் பார்த்து நடுங்கணும்!’

பொறுமைக்கொரு சமுத்திரமாக ஜெமினி கணேசனும் புகழுக்கொரு கோபுரமாக சாவித்ரியும் இணைந்து வாழ்ந்த பொற்காலம் 1970 துடன் பூர்த்தி பெற்றது.

சாவித்ரியின் கோப தாபங்களுக்கேற்ப  அனுசரித்து நடந்தவர் ஜெமினி. சாவித்ரிக்குக் கீழ் படிவதை அவமானமாக ஜெமினி எண்ணியது  கிடையாது. காரணம் சாவித்ரி மீதான எல்லையற்ற பிரேமை. கணேசன் சாவித்ரிக்குப் பிரியமானவன் அல்ல. காதல் ஊழியன் என்பதே சரி!

‘சாதிக்க நினைக்கும் திறமை நிறைந்த பெண்களைப் பார்க்கும் போதே நான் பிரமித்து நிற்பேன். பாராட்டவும் நினைப்பேன்.  சாவித்ரி செய்த எத்தனையோ தவறுகளையும் மிஞ்சி, அவளிடம் எனக்குப் பாசத்தையும் நேசத்தையும் உருவாக்கியது அதுதான்.’- ஜெமினி.

தராசின் தட்டுகள் எடைக்கு ஏற்ப மாறி மாறி உயர்வதைப் போல ஜெமினியும் சாவித்ரியும், போட்டி போட்டிக் கொண்டு சம்பாதித்து உல்லாசமாக செலவழித்தார்கள். நிஜத்தில் யார் பெரியவர் என்கிற ஈகோ அங்கே இல்லை.

ஜெமினி கணேஷ் - சாவித்ரி இணைந்து நடித்த ‘ஆயிரம் ரூபாய்’ உள்ளிட்ட பல படங்களில், தனது பெயருக்கு முன்னாலோ பின்னாலோ ‘நடிகையர் திலகம் சாவித்ரி’, என்கிற டைட்டில் கார்டைக் கண்டு ஜெமினி பெருமிதம் கொண்டார். ஒரு போதும் பொருமியது கிடையாது.

கோலிவுட் கூடாரத்தில் நஞ்சு தோய்ந்த நாக்குகளில்  வெளிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு கணக்கேது?

சாவித்ரிக்கு இருந்த சினிமா செல்வாக்கில், டாப் ஸ்டார்  அந்தஸ்தில் ஜெமினி அண்ணாச்சி குளிர் காய்ந்தார். மற்றபடி அவருக்குத் தனிப்பட்ட முறையில் மார்க்கெட் கிடையாது என்றவர்களும் உண்டு. அதை அடியோடு மறுத்தவர் சீனியர் சினிமா தயாரிப்பாளர்.

ஜெமினி கணேசன் நாயகனாக நடிக்க, முதன் முதலில் முன் பணம் கொடுத்த ஸ்டுடியோ அதிபரின் வாரிசு.

‘சாவித்ரியால் மட்டுமே ஜெமினிக்கு மவுசு வந்தது  என்பதை ஒரு சதவிகிதம் கூட ஒத்துக்க மாட்டேன். ஜெமினிக்கென்று தனியே மார்க்கெட் இருந்தது. நடிகையின் தயவால் நிற்க  வேண்டும் என்றிருந்தால், அன்றைய ஹீரோயின்களிலேயே மிக அதிகமாக சம்பளம் வாங்கிய சரோஜாதேவியை ஜெமினி நட்பு பாராட்டியிருக்க மாட்டாரா?’

காதல் மன்னனும் சாவித்ரியும் அவர்களின் தயாரிப்பில் தொடர்ந்து நடித்தவர்கள். அவை அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். தேசிய விருதுகளும் பெற்றவை.

சாவித்ரியால் புண்பட்டிருந்த ஜெமினி கணேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு ஆறுதல் அளித்தது. அதைப் பெற்றுக் கொள்ள பாப்ஜியுடன் தலைநகருக்குச் சென்று திரும்பினார் ஜெமினி கணேசன். ஜனாதிபதி வி.வி. கிரி மற்றும் அவரது மனைவியுடன் தம்பதி சமேதராக  ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள் ஜெமினி - பாப்ஜி இருவரும்.

சாவித்ரிக்கு உள்ளுக்குள் ஏதோ உதைத்தது.

சிவாஜியின் கால்ஷீட் கிடைக்காமல் சாவித்ரி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சமயம். ஜெமினி போட்டது போட்ட படி, 1970 மே 6ல்  பூவா தலையா - பட அதிபரும், அன்றைய தி.மு.க. எம்.எல். ஏ.வுமான ராம. அரங்கண்ணலுடன் ஜெர்மனி பிராங்க்ஃபர்ட் நகருக்குக் கிளம்பிச் சென்றார்.

ரோம், ஏதென்ஸ், ஸ்விஸ் என திடீர்  தூர தேசப் பயணம். ஜூன் முதல் தேதி  சென்னை திரும்பினார். 

‘பிராங்க்ஃபர்ட் போக வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் மன நிம்மதி இல்லாமல் இருந்ததால், பிராங்க்ஃபர்ட் போக முடிவு செய்தேன். இரண்டே நாள்களில் வந்து விடலாம் என  எண்ணினேன். ஆனால் அரங்கண்ணலின் வற்புறுத்தலால் டூர் ஒரு மாதம் ஆகி விட்டது.’ - ஜெமினி கணேசன்.

1970  ஜூன் 15  -ஞாயிறு.  மக்கள் கலைஞர் ஜெய்சங்கரது  இரு தம்பிகளின் திருமணம். ஏவிஎம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில். ஜெமினி கணேஷ் இல்லாமல் தனித்து, தன் இரு குழந்தைகளுடன்  வரவேற்பில் கலந்து கொண்டார் சாவித்ரி.

நடிகையர் திலகம் வழக்கம் போல் முழு அலங்காரங்களுடன் சிங்காரித்துக் கொண்டு பவனி வராமல், யாரோ மாதிரி கழுத்து வரை போர்த்தியபடி மிக எளிமையாக தோற்றமளித்தார். சாவித்ரியை சகலரும் பார்த்த பார்வையில் பரிதாபத்தின் பாதாளம் தெரிந்தது. 

 அதே ஜூனில் சாத்தணூர் டேமில் ‘பேரப்பிள்ளை’ ஷூட்டிங். ஜெமினி கணேசன் - ராஜஸ்ரீ  ஜோடியைப் பார்த்ததும் ரசிகர்கள் குவிந்தனர். தன் விசிறிகளுடன் ஆட்டோகிராஃப், போட்டோ என உற்சாகமாகப் பொழுது போனது ஜெமினிக்கு. போதாக்குறைக்கு ஜனங்களிடம் வலிய ராஜஸ்ரீயை அறிமுகப்படுத்தி ஆனந்தப் பரவசம் அடைந்தார்.

ஜூலை 1970. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை திறப்பு விழா. சிவாஜி - சாவித்ரி, சற்றுத் தள்ளி  பத்மினி - ஜெமினி  என நால்வரும் தனித் தனியே நிற்க- சிவாஜியும் ஜெமினியும் பேசிக் கொண்டிருந்த நேரம் மீடியாவில்  ஃபோட்டோ எடுத்து விட்டார்கள்.

1963ல்  நெல்லைச் சீமையில் ஊரே வியக்க, பாரதி விழாவில் பங்கேற்ற ஜெமினி- சாவித்ரி ஜோடி, கயத்தாறில் விட்டு விலகித் தோன்றி, கலகலப்பைத் தொலைத்ததற்கு சாட்சி அந்த நிழற்படம்.

ஆகஸ்டு 16. 1970.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம். முதல்வர் கலைஞர் தலைமையில் நட்சத்திர இரவு. காதல் மன்னனும் நடிகையர் திலகமும் வெவ்வேறு நிகழ்வுகளில் தனித்தனியே தோன்றினர்.

சிவாஜி- சாவித்ரி இணைந்து சத்தியவான் சாவித்ரி தெருக்கூத்து ஆடினார்கள். ‘சகுந்தலையின் சுயம்வரம்’ நாடகத்தில் ஜெமினிகணேசன்- தேவிகாவோடு நடித்தார்.

நடிகர் திலகத்தின் பிறந்த நாள்  உள்பட, சிவாஜி சம்பந்தப்பட்ட வைபவங்களில் தொடர்ந்து பங்கேற்றார்  சாவித்ரி. அண்ணனின் தயவில்லாமல் என்ன நடக்கும்? ஓரளவு அதற்குப் பலனும் கிடைத்தது.

1970 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் நாலு படங்கள்  வெளி வருவதாக அறிவிக்கப்பட்டது. அவை சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாதுகாப்பு, பிராப்தம்.

அதே குஷியில் ஜெமினியைத் தேடிச் சென்றார் சாவித்ரி. ஸ்ரீதரின் அவளுக்கென்று ஓர் மனம் ஷூட்டிங். ஜெமினி - காஞ்சனாவுக்கு முகூர்த்த சீன்.  மனமாரத் தன் கணவரை அட்சதை தூவி ஆசிர்வதித்தார் சாவித்ரி.

‘சினிமால இது எனக்கு 87 வது கல்யாணம். மேரேஜ்னால போர் அடிக்குது’  காதல் மன்னன் சலிப்பாகப் பேசினார். அவரது நிலையில் பெரிய மாற்றம் இல்லை. சாவித்ரிக்கு  தோல்வி.

ஒரே நாளில் சிவாஜியின் நாலு படங்கள் திரையிடப்பட்டால் அது சினிமாவுலகுக்கு நல்லதல்ல. வசூலைப் பாதிக்கும் என எதிர்ப்பு வலுத்தது.  ஏகப்பட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு  பிராப்தம் வெளியீடு கேள்விக்குறியாகி விட்டது.

அதற்கிடையே சோபன்பாபு- வாணிஸ்ரீ  ஜோடியோடு, சாவித்ரியின் மகன் சதீஷ்           (மீடியாவில் அன்று அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்) நடிக்க, ஒரு தெலுங்கு சினிமா உருவானது. உஷாஸ்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.

ஜெமினிக்கு சச்சரவுகள் சாவித்ரியின் சூடேற்றும் சுபாவங்களுடன் மட்டுமே. ஓடோடி வந்து மகன் சதீஷை வாழ்த்த மறக்கவில்லை அப்பா.

முகத்தில் அரும்பு மீசை ஆச்சர்யமூட்ட குட்டி ராஜாவாக, வெகு ஜோரான மேக் அப்பில்  காமிரா முன்பு நின்றார் சதீஷ். தன் ஒரே ஆண் வாரிசைக் கட்டித்தழுவி,  ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் தகப்பன்சாமி. அந்தப் புகைப்படத்தில் சாவித்ரி மிஸ்ஸிங்!

சாவித்ரியால்  சம்சார வீணையில் முன்பு போல் மோகனமோ, ஆனந்த பைரவியோ மீட்ட இயலவில்லை. ஜெமினி கணேசனுக்கும் அதே நிலை.

1970 தீபாவளிக்கு சிவாஜியைப் போலவே ஜெமினிக்கும் காவியத்தலைவி, மாலதி என இரண்டு சினிமாக்கள் ரிலீஸ் ஆனது. பணமா பாசமாவுக்குப் பிறகு அதே கூட்டணி இணைந்த படம் மாலதி. சாவித்ரியுடனான சண்டைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன.

நடிக மன்னன், நடிப்புச் செல்வம், பத்மஸ்ரீ என்றெல்லாம் பட்டங்கள் பெற்ற ஜெமினிக்கு, அன்றைய ஷூட்டிங்  வரலாறு காணாத தொழில் தோல்வி.

‘அது ஒரு சாதாரண சீன். அன்று நான் மனம் குழம்பிப் போயிருந்தேன். அதனால் சரி வர செய்ய முடியவில்லை. ஏழு, எட்டு டேக்குகள் ஆகி விட்டன. நான் தவித்துப் போனேன். என் கால்கள் தரையில் பாவவில்லை. அழுகையே வந்து விட்டது.

‘என்ன ஆச்சு கணேஷூக்கு...?’ இதமாக டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், என்னை ஆறுதல் படுத்தியும்  நடிப்பு மறந்து போனது. நேரம் ஓடிக்கொண்டே இருந்ததில் லன்ச் பிரேக்  அறிவித்தார்கள்.

மதியத்துக்குப் பிறகு முயற்சி செய்தும் நான் ஏமாற்றத்தைத் தழுவினேன். கே.எஸ். ஜி. எனக்காக ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டார். தீராத அவமானம்! மாறாத வடு. ஆறாத காயம். அந்த காட்சியை நான் இரண்டு நாள்களுக்குப் பிறகே ஒழுங்காக நடித்து முடித்தேன்.’ - ஜெமினி கணேசன்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடக்கக் காலத்தில்  பாடிய ‘கற்பனையோ கை வண்ணமோ...’ பாடல் மட்டும் மாலதியை ரசிகர்களுக்கு இன்று ஞாபகப் படுத்தும்.

பிராப்தம் முடிந்தும் ரிலிசாகாத சங்கடம், ஜெமினி வழக்கம் போல் தன்னைத் தேடி வராத ஆத்திரம், ராஜஸ்ரீ விவகாரம் எல்லாம் சேர்ந்து, நடிகையர் திலகத்தின்  மனக்குள வெப்பத்தில் மேலும் அக்னி அஸ்திரங்களைப் பாய்ச்சின.  ஜெமினியுடனான தகராறு குறித்து  விசாரித்தவர்களை  சாவித்ரி ஆவேசமாக விளாசித் தள்ளினார்.

‘ என் சொந்தப் பணத்துல நான் எப்படி வேணும்னாலும் யாரை வெச்சியும் படம் எடுப்பேன். ஏன்? போன தடவை குழந்தை உள்ளம் படத்திலே இவரை ஹீரோவா நான் நடிக்க வைக்கலியா?

பிராப்தம் படம் எடுக்கறது பிசினஸ் ரீதியிலே. அதுக்கு இவர் என் கணவர்ன்ற முறையில பக்கத்துல இருந்து எனக்கு உதவி செய்து ஆதரவா நிக்க வேணாமா.

எக்கேடாவது கெட்டு ஒழிஞ்சி போன்னு ஒதுங்கிக்கிட்டா எப்படி?

தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிட்டு, தன்னந்தனியா நடுக்கடலில் ஒரு தீவுல நின்னு தவிக்கிற நிலைக்கு நான் ஆளாயிட்டேன். என் தலையெழுத்து.  எனக்கு இவர் கை கொடுத்துக் காப்பாற்ற வேண்டாமா? இவரை விட்டா இந்த சினிமா உலகத்துல எனக்கு யார் இருக்காங்க? அநியாயத்துக்கு என்னைக் கை விட்டுட்டு ஒரேயடியா ஒதுங்கிக்கிட்டாரே.

முந்தி மாதிரி தினமும் என் வீட்டுக்கு வர்றதும் இல்ல. எப்பவாவது வர்றாரு. வந்தாலும் என்னோட முகம் கொடுத்தும் பேசறதில்ல. அவர் பேசலங்கிற போது நான் ஏன் அவரோட பேசணும்?  நானும் பேசறதில்ல. அப்புறம் இவரு எதுக்கு?

இதுக்குத்தானா அன்னிக்கு எங்க பெரியப்பா சவுத்ரி அவ்வளவு தடுத்தும், அதையெல்லாம் மீறி, ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைங்களோட இருக்கிற இவரை மனசார விரும்பிக் கட்டிக்கிட்டேன்.?

‘இப்போ உனக்கு சந்தோஷமா இருக்கும். பின்னால நீ ரொம்ப கஷ்டப்படுவேன்னு’  பெரியப்பா சொன்னது சரியாய்ப் போயிடுச்சி.’ 

விடை கிடைக்காத வினாக்களின் ஊர்வலத்தில் சாவித்ரி தொலைந்து போனார்.

காதல் மன்னனும் நடிகையர் திலகமும் எந்தத் தருணத்தில் ஒன்று கூடினர் என்பது எவருக்கும் தெரியாது. அதைப் போன்றே  1970ன்  இறுதியிலோ 1971ன்  துவக்கத்திலோ அவர்கள் பிரிந்த நொடிகளும் முகவரியற்றுப் போயின.

முழு கட்டுரையைப் படிக்க →