புத்தர் இனி சிரிப்பார்
உயிர்களின் துன்பத்திற்குக் காரணம் பிறப்பு, பிறப்பிற்குரிய காரணம் ஆசை, ஆசைக்குக் காரணம் அறியாமை என்னும் ஞானம். ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான். மூப்பு (முதுமை), பிணி (நோய்) சாக்காடு (மரணம்) உலகத்தின் துயரம்.
உலகின் வேறெந்த நாட்டையும் விட அறிவு என்பதை தன் இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் நாடு இந்தியா. ஒழுக்கம், உயர்வு, ஆன்மிகம் இவை எல்லாவற்றிலும் உலக நாடுகளுக்குத் தாயகமாக விளங்கி என்றும் இளமையுடன் இருக்கும் அன்னை. ரிஷிகளின் திருவடிகளையும், நடமாடும் தெய்வங்களையும் கண்டு வணங்கி பொலியும் இந்தத் திருநாட்டில் அமைதியைக் குலைக்க வன்முறையாட்டங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகின்றன.
பண்டைய இந்தியாவில் அறிவும், ஆன்மிகமும், ஒழுக்கம் கோலோச்சின. அவை மக்களின் வாழ்வு மையங்களாக விளங்கின. இன்று போல் அன்றும் அரசியல் சக்தியும், சமூக சக்தியும், அறிவு மற்றும் ஆன்மிக சக்திகளுக்கு அடிபணிந்துதான் இருந்தன. புத்த மதம் இந்தியாவில் மக்களிடையே, ஆசையை வேரறுக்கச் செய்து அன்பை போதித்தது.
"ஆசையே அழிவுக்குக் காரணம்' என்றார் புத்தர். ஆனால், வன்முறையாளர்களுக்குப் பாவமே இனிதாகத் தெரிகிறது.
Advertisement
உயிர்களின் துன்பத்திற்குக் காரணம் பிறப்பு, பிறப்பிற்குரிய காரணம் ஆசை, ஆசைக்குக் காரணம் அறியாமை என்னும் ஞானம். ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான். மூப்பு (முதுமை), பிணி (நோய்) சாக்காடு (மரணம்) உலகத்தின் துயரம்.
துன்பத்திற்கும் மரணத்திற்கும் பாலம் அமைத்தது போலவே வாழ்க்கை விளங்குகிறது. தானே தனக்கு கேடு தேடுகின்றான். தான் செய்யும் நற்காரியங்கள் மூலம் ஒருவன் தானாகவே புனிதமானவன் ஆகிறான். எவனும் அடுத்தவனை புனிதமாக்குவதில்லை. இன்பங்கள் நிலையற்றவை, முடிவில் இவற்றால் துன்பங்களே வருகின்றன. ஒரு காலத்தில் இன்பங்களாக உள்ளவை, இன்னொரு காலத்தில் துன்பங்களாக மாறுகின்றன. உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கின்றன என்பது புத்தர் போதனைகளின் சாராம்சம்.
இந்தியாவில் புத்த மதத்தின் மீது மக்கள் கொண்டிருந்த ஆர்வமும், அதன் புதிய வேகமும், மெüரிய மன்னர்களை இந்தியாவின் மிகப் பெரிய சக்கரவர்த்திகள் ஆக்கின. மெüரிய மன்னர்களுடைய பலத்தின் காரணமாகத்தான் புத்த மதம் நாம் இன்று காணும் உலக மதமாக மாறியது. பல மதங்களிலிருந்தும் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்வதுதான் இந்திய மக்களின் பண்பு. அதுவே பாசமாக மாறி அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் ஆண், பெண் வேறுபாடின்றி, ஜாதி வித்தியாசமின்றி வாழ்ந்து, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியாவைத் துண்டாட நினைத்த ஆங்கிலேயர்களை விரட்டியடித்தனர்.
இனத்தாலும், நிறத்தாலும், மொழியாலும், ஆன்மிக உணர்ச்சியாலும் சமுதாய நோக்கங்களாலும் நாம் பிரிந்திருந்தாலும், நம் நாட்டின் ஒற்றுமை உணர்வைப் பல முறை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்திருக்கிறோம்.
பிகார் மாநிலம் புத்த கயையில் உள்ள மகா போதி கோவில், உலகில் உள்ள பழமையான நான்கு புனித புத்தத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதல் புனிதத் தலம் அசோகரால் 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தப் புனிதத் தலம் 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற புனிதத் தலம் புத்த கயை. இங்குள்ள போதி மரத்தின் அடியில் தியானம் மேற்கொண்ட போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
"யுனெஸ்கோ' அமைப்பால் உலகக் கலாசாரப் பாரம்பரியச் சின்னமாக புத்த கயை அங்கீகரிக்கப் பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து இந்தப் புனிதத் தலத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாளும் வருகிறார்கள்.
உலகளவில் நடத்தப்பட்ட "குளோபல் பீஸ் இன்டெக்ஸ்' எனப்படும் உலக அமைதிக் குறியீடு கணக்கெடுப்பில் 161 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வன்முறை நிறைந்த நாடுகளில் இப்போது இந்தியா தனக்கென "தனி இடத்தை'ப் பிடித்துள்ளது!
மக்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பின் அளவு, தேசிய, சர்வதேசப் பிரச்னைகள் கணக்கில் வரிசைப்படுத்தப்பட்டதில் 2011-ஆம் ஆண்டு 144-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2012-இல் மூன்று இடங்களில் முன்னேறி, தற்போது 141-இல் உள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் மிகவும் வன்முறை நாடாக மத்திய ஆப்பிரிக்க குடியரசும், அமைதியான நாடாக ஐஸ்லாந்தும் உள்ளன.
2012-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் வன்முறை காரணமாக சுமார் 799 பேர் உயிரிழந்ததாகப் பதிவாகியிருக்கிறது.
பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் ஆகிய வன்முறை மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்ததால் இந்தியத் தாய் தலைகுனிந்து நிற்கிறாள். சமத்துவமின்மை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் இந்தியாவில் வன்முறையை விதைக்கின்றன. வன்முறைதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்றால் எங்கும் அபயக் குரல்கள்தான் ஒலிக்கும். ஒரு துயரம் மற்றொரு துயரத்தை உருவாக்கும்.
மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட காலத்திலும்கூட ஒரு போதும் வன்முறையுடன் சமரசம் செய்ததே இல்லை. அவர் ஒருமுறை, ""நான் உங்களுக்கு வன்முறையைப் போதிக்க முடியாது. ஏனெனில், நான் அதை நம்புவதில்லை'' என்றார். 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் செüரிசெüராவில் ஒரு காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு அந்த நிலையத்தில் இருந்த காவலர்கள் அனைவரும் கருகி இறந்தபோது, காந்திஜி அந்த வன்முறையை எதிர்த்து 5 நாள்கள் உண்ணா நோன்பை மேற்கொண்டு மக்களை அமைதி வழிக்குத் திரும்பச் செய்தார். ஒரு கண்ணுக்கு பதில் மற்றொரு கண் என்றால் இந்த உலகமே இருண்டதாகிவிடும் என்பதுதான் அவர் உரைத்த உண்மை. மக்களிடையே சமூகப் பொறுப்பு என்பது அருகிவரும் நிலையில் ஜனநாயக நடைமுறையைத் தகர்க்க வன்முறை ஏவிவிடப்படும்போதும் அதைத் தடுக்க மக்களிடையே ஒற்றுமையுணர்வு இருக்க வேண்டும். பழைய இடிபாடுகளிலிருந்து புத்துயிர் பெற்றதோர் இந்தியா எழ வேண்டும்.
செல்வம் பெருகவும், மன அழுத்தங்களைக் குறைக்கவும், துன்பங்களும், துயரங்களும் ஓடி ஒளியவும், மனதில் நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தவும், எல்லா நலன்களும் விரைவில் பெருகவும் வீடுகளிலும், கடைகளிலும், "சிரிக்கும் புத்தர்' சிலைகள் அலங்காரமாக வைக்கப்படுகின்றன. ஆனால், அமைதி பூமியாகவும் தியாக பூமியாகவும் ரிஷிகளும் சான்றோர்களும் ஆன்றோர்களும் வாழ்ந்த இந்தியாவில் வன்முறைகள் பெருகினால் தனது கொள்கைகளைப் பின்பற்றாத இந்தியர்களின் செய்கையைக் கண்டு புத்தர் பரிதாபப்பட்டுதான் சிரிப்பார்!