உணவுக்கு மரியாதை செய்வோம்
உண்ணும் உணவால் உருவாக்கப்பட்டது நம் உடம்பு. குழந்தை முதல் முதியவராகி இறக்கும் வரை நாம் உணவை உண்பதால் நம் உடம்பு படிப்படியாக வளர்ச்சியடைகிறது.
உண்ணும் உணவால் உருவாக்கப்பட்டது நம் உடம்பு. குழந்தை முதல் முதியவராகி இறக்கும் வரை நாம் உணவை உண்பதால் நம் உடம்பு படிப்படியாக வளர்ச்சியடைகிறது. "அன்னம் பரபிரம்ம ஸ்வரூபம்' என்கிறது சாஸ்திரம். அதாவது, இந்த ஊனையும், உயிரையும் காக்கும் உணவு, கடவுளுக்கு ஒப்பானது என நமது முன்னோர்கள் அறிவித்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் பாதையைப் பின்பற்றும் நாம் இப்போதெல்லாம் உணவைத் தெய்வமாக மதிக்கிறோமா? பெரும்பாலோர் உணவை தெய்வத்திற்கு இணையாக மதிப்பதே இல்லை. இதனால் உலகில் பல கோடி மக்கள் உணவு கிடைக்காமல் பசி, பட்டினியால் மாளுவதும், பலர் கிடைக்கும் உணவைச் சாப்பிடாமல் அளவுக்கு அதிகமாகி எந்தவித காரணமுமின்றி உதாசீனப்படுத்தி, வீணடிப்பதும் எங்கும் காண முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாலும், நுகரும் உணவில் மாறிவிட்ட கலாசாரமும் உணவு வீணடித்தலை அதிகமாக்கி விட்டது.
Advertisement
இக்கால நுகர்வுக் கலாசாரம், தான் சாப்பிட முடியாத, விரும்பாத பண்டங்களுக்காக பணத்தையும், நேரத்தையும் விரயமாக்கும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உணவை வீணடிப்பது, தனி மனிதனுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும், நீதி நூல்கள் சொல்லும் உண்மைக்கும் எதிரானது. அது உழைப்பையும், அதன் மூலம் கிடைத்த பணத்தையும், மதிக்காமல் வீணடிப்பது போலாகும்.
விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்திவிட்டன. ஆனால், லாப வணிக நோக்கம் அந்த உணவுப் பொருள்களைப் பற்றாக்குறை நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டன.
திருமணம் போன்ற வைபவங்களிலும், சமயச் சடங்குகளிலும், பலதரப்பட்ட விருந்து கேளிக்கைகளிலும் உணவுப் பொருள்களை வீணடித்தல் என்பது சர்வசாதாரணமாகவும், வசதிபடைத்தவர்களுக்குக் கெüரவமாகவும் மாறிவிட்டது. அங்கு பிறர் வியக்க வேண்டும் என்பதற்காக, தங்களது பண பலத்தையும், பொருளதார செழுமையையும் காட்டும் வகையில் ருசியான உணவுப் பண்டங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வீணடிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் உலகில் சுமார் 20 ஆயிரம் பேர் பசி, பட்டினியால் தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன.
ஒரு மனிதன் தனது ஆற்றலுக்குத் தேவைப்படும் உணவை மட்டும்தான் உண்ண வேண்டும். இல்லாவிடில் உணவே அவனுக்குப் பல நோய்களை உருவாக்கும் களமாகவும் மாறி விடுகிறது. நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்து. ஒருவனுக்குத் தேவைக்கு ஏற்பத்தான் உணவை வழங்க வேண்டும். அவனது வயிற்றின் நெகிழ்ச்சிக்கு ஏற்ப வழங்கக் கூடாது. இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பண்டங்களைச் சமைக்க வேண்டும். அப்படியும், உணவுப் பண்டங்கள் வீணாகும் என்றால், அதை முன்கூட்டியே அருகிலுள்ள குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், அறக்கட்டளைகளுக்குத் தெரிவித்தால் அவர்கள் மீதமான உணவை எடுத்துக் கொண்டு தங்கள் இல்லங்களில் தேவைப்படுவர்களுக்கு வழங்குவார்கள் அல்லது வெளியே பசியால் உணவுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வழங்கலாம். இதனால் நமக்கு மன நிறைவு ஏற்படுவதோடு, அந்த உணவைத் தயாரிக்க நாம் செலவு செய்த பணம் வீணாகவில்லை என்ற சமாதானமும் ஏற்படும்.
நிலத்தில் உணவு தானியங்களை விவசாயிகள் பயிரிட்டு, விளைவித்து, ஆலைகளில் சுத்தப்படுத்தி, கிடங்குகளில் பாதுகாத்து, பின்னர் பல இடங்களுக்கு விநியோகித்து, அவை கடைகளில் விற்பனையாகி, சமையலைறக்கு வந்து, சமையல் செய்து, பின்னர் நம் தட்டில் உணவாக மாறும்வரை பல நிலைகளில் உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன. இவ்வாறு பல நிலைகளைச் சந்தித்து நாம் உண்பதற்காக நமது தட்டில் இருக்கும் உணவுப் பண்டத்தை அற்பக் காரணங்களுக்காக மீண்டும் வீணடிப்பது, பல உழைப்பாளர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவது போலாகும்.
நமது விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் உணவு வழங்கினாலோ, கட்டாயப்படுத்தி உணவு உட்கொள்ளச் சொன்னாலோ நாம் அதிகமாக உண்ணக் கூடாது. நமக்குத் தேவையான அளவு உணவை உண்பது நமது கடமை. அம்மாதிரியான அன்புத் தொல்லைகளின்போது நாம் நமது விருப்பத்தில் உறுதியாக இருந்து தேவைக்கு அதிகமாக உணவு உண்பது உடலுக்குக் கேடு என்பதை அவர்களுக்கும் எடுத்துரைத்து மறுத்து விடுவதே சாலச் சிறந்தது.
நாம் உணவை உண்டு அதன் மூலம் கிடைக்கும் சக்தியை, பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலும், அலுவலகங்களிலும், இறுதியில் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தும் பல வழிகளில் இழக்கிறோம். பணத்தின் மீதான மதிப்பு குறைய குறைய நாம் உணவின் மீதான மரியாதையை இழந்து விட்டோம். உணவை நாம் கிடைத்தற்கரிய பொருளாகக் கருதுவதில்லை. தெய்வமாகவும் மதிப்பதில்லை. உணவை வீணடிக்காமல் இருந்தோமேயானால் நமது அன்றாடச் செலவில் பாதி குறையும்.
சந்தைப் பொருளாதாரத்தில் உணவை உதாசீனப்படுத்துவதும், அதன் மூலம் விலையேற்றம் என்பதும் ஒரு காரணியாகி விட்டது. நாம் உண்ணும் உணவு கடவுளுக்கு இணையானது என்பதைக் குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும். உணவின் அருமை, பெருமைகள் குறித்து பள்ளி புத்தகங்களில் பாடங்கள் கொண்டு வர வேண்டும். ஏனெனில், உணவுப் பொருள்கள் வீணடித்தலும், அதனால் எழும் பிரச்னைகளின் அடித்தளமும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
பெண்களும், சமைக்கும்போது உணவுப் பொருள்களை வீணடிக்காமல் அதன் இன்றியமையாத் தன்மையை உணர்ந்து, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதிலிருந்து, பள்ளிக்கு உணவுப் பொருள்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்புவதுவரை உணவைப் பாதுகாத்து சிக்கனமாகக் கையாள வேண்டும்.
ஒரு நாளைக்கு உணவு சமைக்க எவ்வளவு நேரம், பணம் செலவாகிறது. அதே சமயத்தில் உணவை வீணடிக்கும்போது எவ்வளவு தொகை வீணாகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில், பெண்கள்தான் குடும்பத்திற்கு வேண்டிய உணவை நெருப்பின் முன் நின்று கொண்டு வியர்க்க விறுவிறுக்க தங்களது சக்தியையும், நேரத்தையும் செலவழித்து தயாரிக்கிறார்கள். பசியால் வாடும் மக்கள் முன்பு கடவுள் தோன்றினார் என்றால் அவர் உணவின் வடிவமாகத்தான் இருப்பார் என்றார் காந்திஜி.
டன் கணக்கில் உணவுப் பண்டங்களை வீணடிக்கும்போது, அது மறைமுக உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கும் காரணமாகி உணவுப் பொருள்கள் பதுக்கலையும், உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு ஏழைகளின் மீதுதான் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் வீணடிப்பதை ஒவ்வொரு தனி மனிதனும் சபதமாக எடுத்து தடுத்தால், நாம் உலகிற்கே உணவு அளிப்பவர்களாவோம்.
இந்த பூமிப்பந்து எதிர்காலச் சந்ததியினர் வாழும் இடமாக மாற வேண்டுமானால் உழைப்புக்கும், உணவுக்கும் மரியாதை கொடுத்து, உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுத்து அதன் பாதுகாப்பை முறைப்படுத்துவது அவசியம்.
உணவை வீணடிக்காமல், வீணாகும் உணவைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்குதலே உணவுக்கு நாம் காட்டும் மரியாதை ஆகும்.