FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கருத்துக் களம்

எழுச்சி கொள்ளும் இளைய சமுதாயம்

கல்வி தனியார்மயமாக வேண்டுமா? வேண்டாமா? கல்வித் துறை மத்திய அரசின் பொறுப்பிலா? மாநில அரசின் பொறுப்பிலா? என்கிற விவாதங்கள் நடந்து வரும் நிலையில், கல்வியை ஊனமாக்கும் முயற்சிகளும் மறைமுகமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On : 15 டிசம்பர் 2014, 3:33 am IST
பகிர்:

கல்வி தனியார்மயமாக வேண்டுமா? வேண்டாமா? கல்வித் துறை மத்திய அரசின் பொறுப்பிலா? மாநில அரசின் பொறுப்பிலா? என்கிற விவாதங்கள் நடந்து வரும் நிலையில், கல்வியை ஊனமாக்கும் முயற்சிகளும் மறைமுகமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவை விருத்தி செய்ய வேண்டிய கல்வி ஒரு விற்பனைப் பொருளாகியுள்ளது. கல்விக் கூடங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கும் அளவிற்குக் கல்விக் கூடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகமாகியுள்ளன. நிர்வாகங்கள் கல்விக் கூடங்களைப் பணம் காய்க்கும் மரங்களாக மட்டுமே கருதுகின்றன. கல்வியின் முக்கியத்துவம் முழுமையாக இன்னும் உணரப்பட்டதாகவும் தெரியவில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத்தான் கல்வித் துறை இன்றும் இயங்கி வருகிறது. கல்வித் துறைக்கென தனியாக ஓர் அமைச்சகம் உருவாகாதது அரசுக்கு கல்வியின் மீதான நாட்டமின்மையையே காட்டுகின்றது. கல்வித் துறையை செலவினம் ஏற்படுத்தும் துறையாக அரசு கருதியிருக்கலாம். அதன் விளைவு இன்று மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் அளவிற்குச் சென்றுள்ளது. ஒவ்வொரு அரசும் ஆட்சிக் கட்டிலில் அமரும்போழுது சீர்திருத்தம் என்ற பெயரில் எந்த விவாதங்களையும் கல்வியாளர் மத்தியில் நிகழ்த்தாமல் கல்வித் திட்டங்களை மாற்றி அமைக்க முயலுகின்றன. இதனால் பரிதாபப்பட்டு நிற்பது மாணவர்கள்தான்.

கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானது என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இதன் விளைவு வேலைவாய்ப்பிற்கான சந்தையின் தகுதிப்பாட்டைப் பெற மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றத் துடிக்கின்றனர். கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் இச்சாதனையை எட்டப் போட்டியிடுகின்றனர். இதற்காகப் பணத்தை வாரி இறைக்கப் பெற்றோர்களும், அதை சாதுரியமாகப் பயன்படுத்திப் பணத்தைக் கறக்க நிர்வாகங்களும் நினைக்கின்றன. பகல், இரவு என்றில்லாமல் படி, படி என்று மாணவர்களைப் பிழிந்து எடுப்பதால் சத்துக்குப் பதில் சக்கைகளையே உற்பத்தி செய்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள். இதனால், மாணவர்கள் இளமையிலேயே மன அழுத்தத்திற்கும் ஆளாகிப் போகின்றனர்.

அறிவை வளர்த்தல் என்பதற்குப் பதில் பணம் சம்பாதித்தல் என்கிற எண்ணம் மாணவர்கள் மனத்திலும் ஆழமாக நிற்கிறது. அரசின் செலவில் உயர் கல்வியை, குறிப்பாக மருத்துவம், பொறியியல் கல்வியைப் பெறுவோர், படித்து முடித்தவுடன் வெற்றி வாகை சூடிய கையோடு அயல் நாட்டில் பணம் சம்பாதிக்க இறக்கைக் கட்டிக் கொள்கின்றனர். இந்நிலையில் அறிவிற்கும், தகுதிக்கும், திறமைக்கும் முதன்மையிடம் கொடுத்து, பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி என்னும் எண்ணத்தைச் சில மாணவர்கள் தகர்த்து எறிந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சமீபத்தில் இந்திய தொழில்நுட்ப மையங்களில் (ஐ.ஐ.டி.) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கில் சம்பளம், சலுகைகள் என ஆசை வார்த் தை காட்டி கடை விரித்தன. ஆனால், அதில் கலந்து கொண்டவர்களில் மூன்று மாணவர்களும், ஒரு மாணவியும் அவர்களின் ஆசை வார்த்தைகளைப் புறக்கணித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் நம்பிக்கை ஊட்டுவனவாய் உள்ளன. தங்களுடைய கல்வித் தகுதிக்கும், திறமைக்கும் இந்த வேலை ஏற்றதாக இல்லை என்று கூறியதோடு, தங்களது தகுதிக்கும், திறமைக்கும் மிகவும் குறைவான சம்பளத்தைத் தந்தாலும், தங்களது திறமையை, தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் நிறுவனத்தில் பணிபுரியவே ஆசைப்படுகிறோம் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக சம்பளம், சலுகைகள் இவற்றிற்கு அடிபணிந்து போகாமல் தங்களது தகுதியையும், சுய சிந்தனையையும் அறிவையும், திறமையையும் வளர்த்தெடுக்கத் துணை நிற்கும் நிறுவனங்களில் பணியாற்ற முன்வந்துள்ளது இளைய சமுதாயத்தின் இணையில்லா எழுச்சியைக் காட்டுகிறது. இந்த எழுச்சி இளையோரிடம் பரவலாகும் எனில், உலகத் தரத்திற்கு நிகரான இந்தியாவின் வளர்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments