கருத்துக் களம்

பொறியியல் படிப்பை "சான்ட்விச்' முறைக்கு மாற்ற வேண்டும்

முந்தைய வருடங்களில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்தில், பொறியியல் கல்லூரிகளின் படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் தேர்வுமுறை கடினமாக இருந்தது.

என்.எஸ். வெங்கட்டராமன்

முந்தைய வருடங்களில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்தில், பொறியியல் கல்லூரிகளின் படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் தேர்வுமுறை கடினமாக இருந்தது. நல்ல தரமுள்ள மாணவர்கள் மாத்திரமே பொறியியல் கல்லூரிகளில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், தற்போது பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ள நிலையில், பிளஸ் 2 படிப்பில் குறைந்தபட்சம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் கேட்கும் கணிசமான கட்டண தொகையை கட்ட முடிந்தால், பிளஸ் 2 தேர்வு பெற்ற எல்லா மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையினால், தேர்வு பெற்று வெளிவரும் பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகளின் திறமை ஓரளவு குறைந்து போயிருக்கலாம்.

மேலும், பொறியியல் கல்லூரிகள் நாடெங்கும் கணிசமான அளவில் கூடிவிட்ட நிலையில், அனுபவம் மிக்க, சிறப்பான ஆற்றலும் தகுதியும் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையினால் 65 வயதிற்கும் மேலாக உள்ள பல ஆசிரியர்களையும் தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும், தொழிற் துறையில் அனுபவம் இல்லாதவர்களும் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுகின்றார்கள். தகுந்த ஆசிரியர்கள் இல்லாததால்தான் தங்களின் மதிப்பெண்களும் தரமும் குறைந்துவிட்டது என்று பல மாணவர்கள் கூறுவதாகவும் கேட்க முடிகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், பொறியியல் படிப்பு ஐந்து வருடங்களாகயிருந்தது. பின் அது நான்கு வருடங்களாக குறைக்கப்பட்டது. விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறை உலகெங்கும் பலமுனைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நான்கு வருட படிப்பு, நல்ல முறையில் தேர்ச்சி பெற்று சிறந்த பொறியாளர்களாக வெளிவருவதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. பொறியியல் மாணவர்களின் பட்டப்படிப்பு நெருக்கமான நிலையில் படிக்க வேண்டியிருப்பதால், திறமை குறைவாக உள்ள மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பொறியியல் சார்ந்த பொது அறிவை கூட்டிக்கொள்வது நேரம் இல்லாததால் இயலாததாக ஆகிவிட்டது. பொறியியல் மாணவர்களின் தரம் குறைந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இத்தகைய நிலையில், பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு ஒரே வழி பொறியியல் படிப்பை "சான்ட்விச்' முறைக்கு மாற்றுவதுதான் என்று பல அனுபவம் உள்ள கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். மாணவர்கள் ஓரளவு படிப்பை முடித்த பின், தொழிற்நிலையங்களுக்கு சென்று நடைமுறை பயிற்சி பெற்று, மீண்டும் கல்லூரிக்கு வந்து படிப்பை தொடர வேண்டும். இத்தகைய முறையில், தாங்கள் படித்த பாடங்களை அனுபவ ரீதியில் புரிந்து கொண்டு தொழிற்சாலைகளின் தேவைகளையும், பொறியாளர்களிடமிருந்து தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளமுடியும். இத்தகைய "சான்ட்விச்' முறையை மிகவும் கவனத்துடன் வடிவமைக்க வேண்டும். இத்தகைய முறை சில பாலிடெக்னிக் படிப்பு முறையில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், இத்தகைய முறை அமல்படுத்தப்பட்டு அதன் பலன் நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், "சான்ட்விச்' முறையை நாடெங்கிலும் அமல்படுத்துவதில், சில சிக்கல்கள் ஏற்படலாம். எல்லா தொழிற்சாலைகளும், மாணவர்களை இத்தகைய பணியில் சேர்த்துக் கொள்வதற்கு விரும்புமா என்பதே சந்தேகம்.

மேலும், இத்தகைய "சான்ட்விச்' முறையை ஏற்படுத்தினால் படிப்பின் காலம் மேலும் குறைந்தபட்சம் 12 மாதங்கள் கூட்ட வேண்டும். இதனை மாணவர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகம். இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்துபேசி, "சான்ட்விச்' முறையை அமல்படுத்துவதின் அவசியத்தினை குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இதனை தாமதம் இல்லாமல் செயல்படுத்துவது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

காா் கண்ணாடியை உடைத்து தங்க நகை திருடியவா் கைது

கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் கோரிக்கை

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

சமத்துவபுரத்தில் வீடு பெற்றுத் தருவதாக பணம் மோசடி புகாா்

SCROLL FOR NEXT