சுத்தம் என்பது சொர்க்கம்
சுற்றுப்புறத் தூய்மையே நல்வாழ்விற்கு அடிப்படை. உடையையும், உடலையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.
சுற்றுப்புறத் தூய்மையே நல்வாழ்விற்கு அடிப்படை. உடையையும், உடலையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். ஆனால், சுற்றுச்சூழலில் தூய்மையைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நாம், வீதிகளையும், பொது மக்கள் உபயோகப்படும் பொது இடங்களையும் சுத்தமாக வைக்க தவறி விடுகிறோம். ஆரோக்கியம் என்பது வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகிறது.
நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் மறைமுகமாக வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே அமைக்கப் பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையின் போது நாம் அதைத் தான் செய்கிறோம். ஆனால், பண்டிகைள் முடிந்த மறு நாள் வீதி எங்கும் குப்பைக் கூளங்கள் பெருகி மாசடைந்து காணப்படுகின்றன. பண்டிகை காலங்களில் வீடுகளிலும், தெருக்களிலும் அதிக அளவு குப்பைக் கூளங்கள் சேருவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
குப்பைகளை அதற்குரிய தொட்டிகளில் போடாமல் அங்குமிங்கும் எறிவதால் ஈக்களும், கொசுக்களும் பறந்து வந்து நமக்கு பல நோய்களைத் தந்து விட்டு போகின்றன. குப்பைகள் சேருவதால் காற்று மாசு ஏற்பட்டு ஆரோக்கியக் குறைவும், அதனால் இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றன. நாம் செயற்கையாக உருவாக்கும் சுற்றுப்புறச் சீர்கேடுகளாலும், தொழிற்சாலைகள், வீடு, வணிகம் தொடர்பான கழிவுப் பொருள்கள் என்று பல விதங்களிலும் நிலம், நீர், காற்றை மாசடைய செய்கிறோம். பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் போன்ற மக்காத குப்பைகளால் நிலம் பெருமளவில் மாசடைந்து அதன் வளம் குறைகிறது.
Advertisement
நாம் செய்யும் அனைத்து மாசுக்களையும் நிலம் தாங்கிக் கொண்டிருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதால் சுற்றுச்சூழல் சீர்க்கெட்டு இயற்கை தம் பணியை செவ்வனே செய்ய முடியாமல் போகிறது. அதனால் பருவம் தவறிய மழை, புவி வெப்பம், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும் போது எந்தப் பிரச்னையும் இல்லை. மனிதன் இயற்கையை மீறும் போது தான் ஆபத்து வருகிறது.
இக்காலத்தில் அடுக்கு மாடிகளில் குடியிருப்பவர்களில் பலர் ஆரோக்கியத்தை வாசலோடு நிறுத்தி வைத்து விடுகிறார்கள். வீட்டு ஜன்னலையும் மூடி வைத்து விடுகிறார்கள். இது வீட்டை பாதுகாப்பது போல தோன்றினாலும், மூடிய வீட்டிற்குள் இருக்கும் நோய் கிருமிகள் வெளியேறாமல் நம்மை மீண்டும் மீண்டும் தாக்கும். இதனால் பல நோய்கள் உருவாகும். ஜன்னலை திறந்து வைப்பதினால், சுத்தமான காற்றும், சூரிய வெளிச்சமும் அறை முழுக்க பரவி, நோய் கிருமிகளை வெளியேற்றும். எனவே, வீட்டில் ஆட்கள் இருக்கும் போது அறைகளின் ஜன்னலை திறந்து வைத்திருப்பதே நல்லது. வீடுகளில் தேவையற்ற தட்டுமுட்டு சாமான்களையும், துண்டு, துண்டான மர வகைகளையும் சேர்த்து வைத்தால் அங்கு கொசுக்கள் மற்றும் வேறு பல பூச்சிகளுக்கு இருப்பிடமாகி வீட்டில் ஒவ்வாமையை ஏற்படுத்தி மலேரியா, டெங்கு, டைபாய்டு, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவ காரணமாகி விடுகிறது. வீடுகளை நாம் சுத்தமாக வைப்பதன் மூலம் கிருமிகள் நுழையாமல் பார்த்துக் கொண்டாலே அது ஆனந்தம் விளையாடும் வீடாகி விடும்.
நகக்கண்ணில் உள்ள அழுக்கால் பல நோய்கள் ஏற்படும். நகத்தை பல்லால் கடிக்கக் கூடாது. புத்தகங்களை எச்சில் தொட்டு புரட்டுவது கூடாது. ஏனெனில், நகங்களில் புத்தகங்களில், ஒட்டியுள்ள பூஞ்சான், பாக்டிரியா, வைரஸ் கிருமிகள் நம் வாய்க்குள் புகுந்து அலர்ஜியை ஏற்படுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, நகத்தை வாரம் ஒரு முறை கத்தரித்து பராமரிப்பது நல்லது.
பேருந்துகளில், ரயில்களில் பயணம் செய்வோர் காகிதங்களையும், தின்பண்டங்கள் அடங்கிய பிளாஸ்டிக் உறைகளையும், பொட்டலங்களையும் தாங்கள் பயணிக்கும் வாகனங்களிலேயே போட்டு அசுத்தமாக்கி நோயை பரப்புகிறார்கள். மேலும்,பழங்களைப் பாதி தின்றும், தின்னாமலும், அதன் தோல்களையும் கண்ட இடத்தில் எறிவதால் ஈக்கள் மற்றம் கொசுக்கள் பெருகி சுகாதார சீர்க்கேட்டை உருவாக்குகின்றன. உடல்நலத்தைக் கெடுத்து வாய் புற்று நோயையை உருவாக்கும் பான் பராக் போன்றவைகளை உண்பவர்கள் அடுத்தவர்கள் நலனை கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் அந்த இடமே அசுத்தமாகிறது. மேலை நாடுகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்வோருக்கும், எச்சில் துப்புவோருக்கும் அபராதம், சிறு தண்டனை விதிப்பது போல நம் நாட்டிலும் அந்த முறையைக் கொண்டு வந்தால் தான் இந்தியாவும் சுத்தமான நாடாகும்.
எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் எந்த சிறு நோயும் நம்மை அண்டாது.
நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் அதைபோன்ற சொர்க்கம் வேறு எதுவும் இல்லை. சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடு தான்.