முகப்பு
கருத்துக் களம்

மீண்டும் சந்திப்போம்!

ஓரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் படித்த பள்ளியை எப்போதாவது சென்று பார்த்தது உண்டா? நீங்கள் இந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு அடிப்படையாக இருந்தது நீங்கள் படித்த பள்ளிதானே.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:27 AM
பகிர்:

ஓரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் படித்த பள்ளியை எப்போதாவது சென்று பார்த்தது உண்டா? நீங்கள் இந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு அடிப்படையாக இருந்தது நீங்கள் படித்த பள்ளிதானே.

அந்தப் பள்ளிக்குச் செல்ல இயலாத அளவிற்கு நீங்கள் தொலைவில் இருந்தால்கூட, வருடம் ஒருமுறை நீங்கள் உங்களோடு படித்தவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். அந்த நாளில் நாம் படித்த அந்தப் பள்ளிக்கு ஏதாவது ஒரு நல்லது செய்வோம் என முடிவு செய்யுங்கள். நாம் படித்த காலத்தில் அது இல்லை, இது இல்லை என்ற குறை இருந்திருக்கலாம். இப்போது வசதியும், வாய்ப்பும் வந்துவிட்டதால் இணைந்து அந்தக் குறைகளைப் போக்கலாமே.

தான் படித்த பள்ளிக்கு நன்மைகள் செய்த, செய்து கொண்டிருக்கிற முன்னாள் மாணவர்கள் பலர் உள்ளனர். நம்மால் இயன்ற அளவு நண்பர்களோடு பகிர்ந்து செய்வோம். அதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. குறிப்பாக, நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், கல்வி வளாகத்தை தூய்மைப்படுத்துதல், கட்டடப் பராமரிப்புப் பணிகள் செய்து தருதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தல், மரம் வளர்த்தல், மைதானம் அமைத்துத் தருதல், பற்றாக்குறையான ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், அந்தப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ } மாணவிகளுக்கு தேவைப்படும் பண உதவி செய்தல், கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனைகள் வழங்குதல், கணினி போன்ற நவீன உபகரணங்களை நன்கொடையாக வழங்குதல், கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தருதல், குடிநீர் தொட்டி கட்டி, சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தல், விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தருதல், மின்சாதனங்களை பழுதுபார்த்துத் தருதல் இப்படி நாம் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு.

Advertisement

உதாரணத்திற்கு, திருப்பூரிலுள்ள ஒரு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவழித்து கல்லூரி வளாகச்சுவர் (காம்பவுண்ட்) கட்டப்பட்டது.

இதற்கு பெரிய தொழிலதிபர்கள்தான் உதவ முடியும் என்பதில்லை. ஒரு எலக்ட்ரீஷியன் வருடம் ஒருமுறை அந்தப் பள்ளி, கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பழுதுகளை கட்டணமின்றி சரிசெய்து கொடுப்பதுகூட மிகப் பெரிய உதவிதான். ஆசிரியப் பணியிலிருந்தால் குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி மாணவ } மாணவிகளுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வழிகாட்டலாம்.

இப்படி எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் தாங்கள் படித்த பள்ளி, கல்லூரிக்கு வருடம் ஒருமுறையாவது சென்று பார்த்து தங்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இயன்ற உதவிகளைச் செய்வது அவர்களின் கடமை.

நீங்களும் செய்துபாருங்கள் உங்களுக்குள் ஒரு பெருமிதம் உண்டாகும். இதன்மூலம் பழைய நண்பர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் சில திருப்பங்களும்கூட ஏற்படலாம். இனி ஒவ்வொரு வருடமும் உங்கள் சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாகட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments