முகப்பு
கருத்துக் களம்

ஒற்றுமை வேண்டும்!

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மற்றொரு அடிப்படைத் தேவை தண்ணீர். இந்த தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலங்களுடனான நமது உறவு ஏழாம் பொருத்தம்தான்.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:27 AM
பகிர்:

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மற்றொரு அடிப்படைத் தேவை தண்ணீர். இந்த தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலங்களுடனான நமது உறவு ஏழாம் பொருத்தம்தான்.

தண்ணீர் விஷயத்தில் தமிழகத்திற்கு எந்த மாநிலமும் ஆதரவாக இல்லை என்பது உண்மை. ஆனால், தமிழகத்தை அந்த மாநிலங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும் உண்மை. சமீபத்தில், திருப்பதியில் தமிழக செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதற்காக தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்பதில்லை. அரசு ரீதியாக முறையான கண்டனங்களும் நடவடிக்கைகளும் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

மேலே குறிப்பிட்ட சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி எத்தனையோ பிரச்னைகள் தமிழக மக்களுக்கும், ஏன் அதிகாரிகளுக்கும்கூட அண்டை மாநிலங்களால் ஏற்படுத்தப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்யச் சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கிற போது இரு மாநில உறவு என்பது கவலையளிக்கிறது.

Advertisement

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் கர்நாடகத்துடன் மெüன யுத்தம் கால காலத்திற்கும் நடக்கிறது. இதன் மற்றொரு பரிமாணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் மறுகரையில் உள்ள தமிழர்களை வெளியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இப்படி எத்தனைதான் தமிழர்களுக்குத் தீங்கு நேருமோ தெரியாது.

தமிழருக்கு ஏன் இந்த நிலை? வழக்கமாகச் சொல்லும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கும் செயலை நாம் எப்படி அனுமதிப்பது? அண்டை மாநிலங்கள் தமிழகத்தை பல

வழிகளில் பயன்படுத்திக் கொண்டும் பழிவாங்கிக் கொண்டும் இருப்பது தமிழர்களின் காவலனாக இருக்கும் தமிழக அரசிற்கும், தமிழகத்தை இமைப்பொழுதும் சோராமல் பாதுகாப்போம் என சூளுரைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெரியாமலா இருக்கிறது? ஏன் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறார்கள்? இது மட்டுமல்ல பிற மாநில உறவு, கச்சத்தீவு ஒப்பந்தம், மீனவர்கள் பிரச்னை என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

விலையில்லாப் பொருள்களைக் கொடுத்து யாருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திவிட முடியாது. தொடர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தொழிலும், சம்பாத்தியத்தை சேமிக்க வாய்ப்புகளையும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து சம்பாதிப்பதை வழி தவறிய நிலையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி செலவிடுவதும் சேமிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டதும் நிதர்சனமான உண்மை.

நாம் மட்டும் "நமது இந்தியா' என்கிற பரந்த கண்ணோட்டத்தில் அண்டை மாநிலங்களுடன் சகோதர உணர்வோடு இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. அவர்களுக்கும் இதே உணர்வு இருக்க வேண்டும். இல்லையேல், புரிதல் இல்லாமல் நாம் அவர்களுக்கு விரோதிகளாகவே இருந்துவிடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments