முகப்பு
கருத்துக் களம்

சிறந்த சமுதாயம் படைப்போம்!

உலகில் ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியிலில் இந்தியா இருக்க வேண்டும் என சாதாரண மக்களாகிய நாம் நினைக்கும் போது, நம்மை வழிகாட்டும் தலைவர்களுக்கு ஏன் இந்த சிந்தனை வரவில்லை.

Updated On : 28 ஜூலை, 2025 at 4:27 AM
பகிர்:

உலகில் ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியிலில் இந்தியா இருக்க வேண்டும் என சாதாரண மக்களாகிய நாம் நினைக்கும் போது, நம்மை வழிகாட்டும் தலைவர்களுக்கு ஏன் இந்த சிந்தனை வரவில்லை. லஞ்சம், ஊழல் மட்டுமல்ல உலகில் வாழத் தகுதியற்ற, மாசடைந்த நகரங்களைக் கொண்ட நாடுகளில் நம் நாடும் உள்ளது. இப்படி எல்லாவித பலவீனங்களையும் நாம் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன? இதில் எந்த அரசுத் துறையும் விதிவிலக்கில்லை.

நம்மை ஆள்பவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்றுதான் சிந்திக்கிறார்களே ஒழிய, நாட்டை எப்படி முன்னேற்றலாம் எனச் சிந்திப்பதே இல்லை. சரி இந்த லஞ்சம், ஊழல் எப்படி வந்தது? எப்படி வைரஸ் பரவுகிறதோ அப்படி யாராவது பரப்பினார்களா? ஏன் இந்த சமூகம் இப்படி லஞ்சம், ஊழல் என்கிற தாழ்ந்த நிலைக்குப் போயிருக்கிறது? இப்படிப் பல கேள்விகள் நம் மனதில் எழுந்தாலும், அடிப்படைக் காரணம் பேராசைதான். இதைத்தான் புத்தர் அன்றைக்கே சொல்லிவிட்டாரே என நீங்கள் நினைக்கலாம். புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று சொன்னதாக நாம் படிக்கிறோம்.

ஆசை இல்லாவிட்டால் மனித வாழ்க்கையே இல்லை. ஆனால், அந்த ஆசை பேராசையாக மாறிவிடக்கூடாது. அப்படி மாறியதுதான் இத்தனை அவலங்களுக்கும் காரணம்.

Advertisement

அரசு அலுவலகங்களில் வரிசையில் நின்று அனைவரும் தங்கள் முறை வரும்வரை பொறுத்திருந்து வேலையை முடித்துச் செல்வதுதான் சரியானது. அதை விடுத்து, தனக்குள்ள அவசரத்தால் தனது வேலையை விரைந்து முடிக்கவும், வரிசையில் நின்று முறைப்படி போகாமல் இருக்கவும் என ஒரு தொகையை லஞ்சமாகத் தந்து தங்கள் வேலையை சாதித்துக் கொள்கின்றனர்.

ஏற்கெனவே வசதி படைத்தவனாக இருந்தாலும், முறைகேடான வழியில் செல்வம் சேர்ப்பதில் சளைக்காமல் செயலாற்றுகிறான். இவர்களை என்ன செய்ய? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற தத்துவமும் பொய்த்துப் போகிறதே.

தீமை கண்டு அஞ்சிய காலம் மறைந்துவிட்டது. இன்றைய சமூகம் பலவித பேராசைப் பேய்களின் பிடியில் சிக்குண்டுவிட்டது. அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற சமூகக் காரணங்களால் நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டது.

இதனால், நாம் அண்டை அயலாரைப் பார்த்துப் பொறாமை கொண்டும், தூண்டுதல் ஏற்பட்டும் நமது நுகர்வினை அளவீடுகளையும் தாண்டியதாக அமைத்துக் கொண்டோம். இதில் பலசமயம் கடன் வாங்கிக்கூட நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்பது உண்மை.

இப்படியெல்லாம் ஆனபிறகு, தனி மனித சேமிப்பு இல்லாமையும், மற்றவர்களைப் பார்த்து ஏற்பட்ட பாதிப்பும் பல்வேறு கட்டுப்பாடுகளை, நாகரிகங்களைக் கட்டவிழ்த்துவிட்டது.

இதில் தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் சூழ்நிலை பார்ப்பதில்லை. தனது ஆசை நிறைவேறுகிறதா என்பதை மட்டுமே நமது ஆழ்மனம் நினைத்துச் செயல்படுவதால், அது கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப நமது செயல்பாடுகள் அமைகிறது. பலநேரம் நாம் நிதானமாகச் சிந்திக்கும்போது, அன்று நாம் ஏன் அப்படி நடந்துகொண்டோம், ஏன் அந்தப் பொருளை வாங்குவதற்கு அப்படி அவசரப்பட்டோம் என்றெல்லாம் தோன்றும்.

ஒருவர் தனது வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதைக் காட்டிலும், நேர்மையாக நடப்பதையும், உழைத்து வாழ்வது பற்றியும் சொல்லிக் கொடுத்தாலே போதும். சொத்து சேர்த்து வைத்து (அதுவும் முறையற்ற வழியில்) சோம்பேறிகளாக்காமல், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்கிற பழக்கத்தை உண்டாக்க வேண்டும். ஆனால், இன்றைய பெற்றோர் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள்?

நம் நிலைதான் இப்படி, அடுத்த தலைமுறையாவது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்கிற நோக்கமும் இல்லை. அவர்களையும் செல்வம் சேர்க்கும் பந்தயத்தில் இணைத்துப் பழக்குகிறோம். இப்படியே போனால் நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. விதைகளே விஷமாகிப் போனால், விளைச்சல் எப்படி இருக்கும்?

தண்டனை கிடைக்கும் என்பதற்காக நேர்மையாக இருப்பதைவிட்டு, நேர்மையாக உழைத்து வாழ்வதையே நாம் குறிக்கோளாகக் கொண்டால், நமது நாடு மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளும் வாழ்வதற்குத் தகுதியான நாடுகளாக இருக்கும். நாமும் சம்பாதிப்பதற்காக பெருமுயற்சி செய்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் எழாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments