தூய்மை இந்தியா உருவாக...
ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களெல்லாம் அங்கிருந்த கழிப்பறையிலிருந்து வருகிற துர்நாற்றத்தை நுகராமல் இருக்க மூக்கைப் பொத்திக் கொண்டு நின்றிருந்தார்கள்.
ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களெல்லாம் அங்கிருந்த கழிப்பறையிலிருந்து வருகிற துர்நாற்றத்தை நுகராமல் இருக்க மூக்கைப் பொத்திக் கொண்டு நின்றிருந்தார்கள். பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்கப் பாதை வழியாக மின்சாரத் தொடர் வண்டி நிலையத்திற்கு செல்பவர்களும் மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றார்கள். காரணம், சுரங்கப் பாதையில் நீர் தேங்கி அவ்வளவு துர்நாற்றம்
இவ்விரண்டு நிகழ்வுகளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் சென்னையின் தெற்கு நுழைவாயிலான தாம்பரம் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் நடப்பவை. கழிப்பறையைச் சுத்தம் செய்ய போதுமான தண்ணீர் கிடையாது. பாலிதீன் பைகள் நீர்நிலைகளை அடைத்துக் கொள்வதால் ஏற்படும் துர்நாற்றம் நகரத்தில் மட்டுமல்ல கிராமத்திலும் இன்றைக்கு கண்கூடு.
கட்டப்பட்டிருக்கும் எல்லா இடங்களிலும் பொதுக் கழிப்பறைகள் துர்நாற்றத்தோடு பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கின்றன. கழிவு நீர் செல்லும் பாதைகளில் பாலிதீன் பைகள் குவிந்து கிடக்கின்றன.
Advertisement
Advertisement
இப்போதைய மத்திய அரசு இரண்டு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்த ஆயத்தமாக உள்ளது. ஒன்று தூய்மை இந்தியா, மற்றொன்று இந்தியாவில் தயாரிப்போம். பிரதமரின் கனவுத் திட்டங்களாக முன்னெடுக்கப்படும் இவை இந்தியாவுக்குப் புதியதல்ல.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது பண்டித நேரு யுனெஸ்கோவிடம், "400 மில்லியன் மனித வளத்தைக் கொண்டுள்ள இந்தியா தனது ஏழ்மையை தொழில் மற்றும் அறிவியல் வளர்ச்சியால் வென்றுவிடும். அதற்கான கல்வி உதவியை மட்டும் நீங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும்' என்றார். அறுபத்திநான்கு ஆண்டுகளில் நாம் தொழில் புரட்சியிலும், அறிவியல் வளர்ச்சியிலும் முன்னேறியிருக்கிறோம். ஆனால், இன்றைக்கும் ஏழ்மையையும், தூய்மையின்மையையும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
தொழில் புரட்சியினாலும், மனித வளத்தாலும் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கின்றன. அறிவியல் புரட்சியால் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை விடுமளவு வளர்ந்திருக்கிறோம். ஆனால், உள்ளூர் சுகாதாரத்தில் நாம் மூக்கைப் பொத்திக் கொண்டு பயணிக்கிறோம்.
இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில், சோவியத் ரஷ்யா போல வல்லரசாக வேண்டுமென்றால் தொழிற் புரட்சி ஏற்பட வேண்டும் என்று ஒரு பிரிவினரும் கிராம சுயராஜ்ஜியமே வேண்டும் என்று ஒரு பிரிவனருமாக விவாதித்துக் கொண்டிருந்ததாக நமது வரலாறு தெரிவிக்கின்றது.
கிராம சுயராஜ்ஜியத்தைத் தான் காந்தியடிகள் முன்னிறுத்தினார். இந்தியா ஏழு லட்சம் கிராங்களை உள்ளடக்கியது, அதற்கு தொழிற் புரட்சி தேவையில்லை என்றார் அவர். தங்களுக்கான தேவைகளை தாங்களே தயாரித்துக் கொள்ள வேண்டும். அவசியத் தேவைகளைத் தவிர, மற்றவற்றிற்கு இயந்திரமோ, வெளிநாட்டு உதவியோ தேவையில்லை என்பது காந்தியடிகளின் நம்பிக்கை. நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை நமது தேவைக்கு ஏற்ப சுரண்டலில்லாமல் பயன்படுத்திக் கொள்வதே சுதேசி - சுதந்திரம் என்றார் அவர்.
காந்தியடிகளின் கிராம சுயராஜ்ஜியத்தில் சூழலியலின் மூன்று கோட்பாடுகள் உள்ளடங்கி யுள்ளன. மறு சுழற்சி, மறு பயன்பாடு, மக்காத குப்பைகளைக் குறைத்தல் என்பவையே அவை.
மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகியவற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் சூழலியலின் மூன்றாவது கோட்பாடான மக்காதக் குப்பைகளை நம்மால் குறைக்க முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே இந்தக் கோட்பாடுகளை எண்ணியே தமிழர்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்து, அந்தந்த நில வகையில் இயற்கைக்கு தகுந்தாற் போல் வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.
இன்றைக்கு கிராமங்களில் தயாரிக்கப்பட்ட மூங்கில் கூடைகள், காகிதப் பைகள், துணிப் பைகள், மண் பாண்டங்கள், கதர்த் துணிகள் ஆகியவற்றின் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வண்ண வண்ணமான மெல்லிய பாலிதீன் பைகளும், பிளாஸ்டிக் பொருள்களும், பயன்படுத்தித் தூக்கியெறியும் பொருள்களுமே நம் வீடு முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இவை மக்காத குப்பைகளாக மாறி தெருவெங்கும் வியாபித்துள்ளன சுகாதாரக் கேட்டை உற்பத்தி செய்கின்றன.
தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு மறுசுழற்சி, மறுபயன்பாடு, மக்காத குப்பைகளை குறைத்தல் என்பது அடித்தளமானவை. இவற்றைப் பேணுவதை விட்டுவிட்டு கிராமம் தோறும் தனிமனிதக் கழிப்பறை, பொதுக் கழிப்பறை அமைத்தால் மட்டுமே இந்தியா தூய்மையாகி விடாது.
இந்தியாவை நோக்கி வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள் என்று மேலை நாடுகளுக்கு அழைப்பு விடுப்பதில் தவறில்லைதான். ஆனால், அவை இங்கிருக்கும் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்டுவதை இன்றைய கட்சி அரசியலும், ஓட்டு அரசியலும் கண்டுகொள்ளாமல் இருப்பதே கடந்த அறுபத்தி நான்கு ஆண்டுகளில் நாம் கண்டது.
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உற்பத்தி பெருக்கத்திற்கும், சுயலாபத்திற்கும் ஆசைப்பட்டு கால்நடைப் பராமரிப்பு, உள்ளூர் நீர்நிலைகள் பாதுகாப்பு, மலக்கழிவுகளை உரங்களாக பயன்படுத்துவது போன்றவற்றை ஒதுக்கிவிட்டு இயந்திரத்துக்கும், மின்னணு குப்பைகளுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். மின்னணு பயன்பாட்டுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியையாவது கிராமப்புற கைத்தொழில்களுக்கு வழங்கினால் நீடித்த வளர்ச்சிக்கு அது பயன்தரும்.
இந்தியாவில் உள்ள சுமார் ஆறு நவீன நகரங்கள் நாடு என்னும் உடலில் உள்ள அவசியமற்ற வீக்கம். தற்போதைக்கு இவை கிராமங்களின் ரத்தத்தை உறிஞ்சும் தீச்செயலை செய்துவருவன துடுக்கான முறையில் நகரங்கள் இன்று செய்யும் தவறுகளெல்லாம், கிராமங்களின் வாழ்வுக்கும் சுதந்திரத்துக்கும் ஓயாத தொந்தரவாக அமைந்திருக்கின்றன. ஏழையாக இருக்கும் இந்தியா சுதந்திரம் பெற முடியும். ஆனால், ஒழுக்கக் கேடான முறைகளின்மூலம் வளம்பெற்ற இந்தியா தனது சுதந்திரத்தை மீண்டும் அடைவதென்பது மிகக் கடினமானதாகும் என்ற காந்தியடிகளின் கூற்று இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.
நம்முடைய சுயநலத்துக்காகவும், நாகரிகம் என்ற பெயரில் நாம் வாழும் பகட்டான வாழ்க்கையாலும் நம்முடைய பேரப் பிள்ளைகளுக்கு நாமே மரணக் குழிகளைத் தோண்டிக் கொண்டிருக்கிறோம்.