முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 367

செவியில் காதணிகள் சூரியனைப் போல

Updated On : 3 அக்டோபர், 2016 at 6:18 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM

பதச் சேதம்

சொற் பொருள்

மார்பில் அணி வங்கார தாரோடு உயர் கோடு அசைய கொந்துஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல

Advertisement

 

வங்கார(ம்): பொன், ஆபரணம்; தாரோடு: மாலையோடு; உயர் கோடு: உயர்ந்த மலை(யைப் போன்ற மார்பகம்); கொந்து: கொத்து; கொந்துஆர: மலர்க்கொத்துகள் நிறைந்த; ஆரமொடு: மாலையோடு; குழல்: கூந்தல்; வண் காது: வண்மை+காது—வண்மை என்பதற்கு அழகு என்றும் பொருள்—அழகிய காது; ஓலை: காதணி;

மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உறவந்தவரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர்

 

மஞ்சு: மேகம்; சாபம்: வில்; மஞ்சுஆடு சாபம்: மேகத்தில் விளங்கும் வில்—வானவில்; கொஞ்சார: கொஞ்சல் நிறைந்த; உறவந்தாரை: அருகில் (நெருங்கி) வந்தாரை;  

சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசைஉளர் சாதி இலர் சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல்

 

சங்காளர்: கூடிக் களிப்பவர்கள்; சுழல்: சுழலும், திரியும்;

சங்கோதை நாதமோடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள் புரிவாயே

 

சங்குஓதை: சங்கொலி;

சிங்கார ரூப மயில் வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என சிந்தூர பார்வதி சுத ஆகர நமோ நன என விருது ஓதை

 

சிவதேசிக: சிவகுருவே; சிந்தூரம்: குங்குமம்; சுதாகர: சுத ஆகர—மகனாக அமைந்தவனே; விருது ஓதை: வெற்றிச் சின்னங்களின் ஓசை;

சிந்துஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவானவ நமோ நம என திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே

 

சிந்து ஆன: கடலாக (முழங்க); கங்காளர்: எலும்பு மாலை அணிந்தவர்; வேணி: சடாமுடி; ஆழி கடல்; வை: கூரிய; வைவேலை: கூர்மையான வேலை;

இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதாலோடு வனம் மேவி வள்ளி நாயகியை இன்பான தேன் இரசமார் முலை விடாத மணி மார்பா

 

இங்கீத: இங்கித, இனிமையான; ஒரு: ஒப்பற்ற; பெண்காதலோடு: வள்ளியம்மையின் மேல் கொண்ட காதலோடு; வளிநாயகி: வள்ளி நாயகி; ரசமார்: ரசம் ஆர்க்கும், நிறைந்த;

எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகி செங்கோடு மேவி பிரகாச மயில் மேல் அழகோடு என் காதல் மாலை முடி ஆறு முகவா அமரர் பெருமாளே.

 

எண்தோளர்: எட்டுத் தோளர், சிவனார்; காதல் கறி: பிள்ளைக் கறி; செங்கோடு: திருச்செங்காட்டாங்குடி; என்காதல் மாலை: நான் அன்போடு பாடும் பாமாலை; முடி: முடிக்கும், அணியும்;

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய ... (மார்பிலணி வங்காரம்) மார்பிலே அணிந்திருக்கும் பொன் ஆபரணங்களோடு, உயர்ந்த மலைபோன்ற மார்பகங்களும் அசைய;

கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள ... கொத்தான மலர்கள் நிறைந்துள்ள மாலையைச் சூடிய கூந்தல், மணிமாலையோடு தோளிலே புரள;

வண்காதில் ஓலைகதிர் போலவொளி வீச இதழ் மலர்போல... அழகிய செவியில் காதணிகள் சூரியனைப் போல ஒளிவீச; உதடுகள் குமுதமலரைப் போல விளங்க;

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள் ... மேகத்தில் கிடப்பதான வானவில்லைப் போன்ற நெற்றியும்; வாளையும் வேலையும் ஒத்த விழிகளுமாய்;

கொஞ்சார மோககிளி யாகநகை பேசி ... கொஞ்சுகின்ற ஆசைக்கிளியைப் போல சிரித்துப் பேசி;

உற வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென ஆசைமயல் இடுமாதர்... நெருங்கி அருகில் வந்தவர்களை, ‘வாருங்கள், இருங்கள், நீங்கள் எமக்கு உறவினர்கள்’ என்றெல்லாம் ஆசையையும் மயக்கத்தையும் விளைவிக்கும் பெண்கள்;

சங்காளர் சூதுகொலைகாரர்குடி கேடர் சுழல் சிங்கார தோளர்... கூடிக் களிப்பவர்கள்; சூதாடிகள்; கொலையும் செய்பவர்கள்; குடியைக் கெடுப்பவர்கள்; திரிகின்றவர்கள்; அலங்காரம் நிறைந்த தோளை உடையவர்கள்; 

பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் ... பணத்திலே ஆசையுள்ளவர்கள்; சாதிபேதமில்லாமல் அனைவரோடும் கூடுபவர்கள்; இழிந்தவர்கள்;

சீசியவர் மாயவலையோடு அடியென்உழலாமல் ... சிச்சீ. இப்படிப்பட்டவர்களுடைய மாயவலையில் அடியேன் சிக்கித் தவிக்காமல்,

சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயையிருள் வெந்தோட. ...  (யோக வழியில் கிடைக்கின்ற தசநாதங்களான கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில் ஆகியவற்றின்) ஒலியோடு அடியேன் கலந்திருக்க; மாயையாகிய இருள் வெந்து அழிய;

மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே... மூலாக்கினி வீச, உபதேசத்தை என் காதில் குளிர்ச்சியாக ஓதி, உன்னுடைய இரண்டு பாதக்கமலங்களிலும் சேரும்படியாக திருவருள் புரிவாயாக.

சிங்கார ரூபமயில் வாகனநமோநமென ... சிங்காரமான உருவத்தைக் கொண்டவனே! மயில் வாகனனே!  போற்றி போற்றி என்றும்;

கந்தாகுமாரசிவ தேசிகநமோநமென ... கந்தனே! குமரனே! சிவகுரு நாதனே! போற்றி போற்றி என்றும்;

சிந்தூர பார்வதி சுதாகரநமோநமென விருதோதை சிந்தான... குங்குமம் அணிந்த உமையம்மையின் மகனாக அமைந்தவனே போற்றி போற்றி என்றும் வெற்றி முழக்கங்கள் கடலொலிபோல முழங்க; (விருதோதை சிந்தான—வெற்றி முழக்கங்கள் கடலொலிபோல முழங்க என்பதை ‘கங்காள வேணி குருவானவ நமோநமென’ என்பதற்குப் பின்னால் கூட்டிக் கொள்ளவேண்டும்.)

சோதிகதிர் வேலவநமோநமென ... ஒளி சுடர்கின்ற கதிர்வேலவனே போற்றி போற்றி என்றும்;

கங்காள வேணிகுருவானவ நமோநமென ... எலும்பு மாலைகளை அணிந்தவரும் ஜடாமுடியைத் தாங்குபவருமான சிவனாருடைய குருவாக ஆனவனே போற்றி போற்றி என்றும்; (வெற்றி முழக்கங்கள் கடலொலிபோல முழங்க),

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலைவிடு முருகோனே ... திண்மையான சூரபத்மன் முதலானோரும்; கடலும்; கிரெளஞ்ச மலையும் துகள்படும்படி கூர்மையான வேலைச் செலுத்திய முருகனே! 

இங்கீத வேதபிரமாவை விழ மோதி ... இனிமையான வேதங்களைப் பயின்றவனால பிரமன் சாய்ந்து விழும்படியாக மோதியும் (குட்டியும்);

ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை ... ஒப்பற்ற பெண்ணான வள்ளியம்மையின் மீது காதல் கொண்டு அவரிருந்த தினைப்புனத்துக்குச் சென்று அவருடைய,

இன்பான தேனிரசமார் முலைவிடாதகர மணிமார்பா ... இன்பம் தருவதான தேன்போன்ற மார்பிலிருந்து எடுக்காத கையையும்* அழகிய மார்பையும் உடையவனே!

(முலைவிடாத கர மணிமார்பா என்று ‘தத்தைமயில் போலுமியல்’ என்ற புலியூர்த் திருப்புகழிலும் பேசுகிறார்.  இந்தப் பாடலைப் பார்க்கும்போது இதன் பொருளை விரிப்போம்.)

எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு ... எட்டுத் தோள்களை உடையவரான சிவபெருமான் விருப்பப்பட்டு பிள்ளைக்கறியை உண்பதற்காக வந்த,

செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு ... திருச்செங்காட்டங்குடி* என்ற தலத்துக்கு வந்து; ஒளிபொருந்தி மயில்மீது அழகாக வீற்றிருந்து;

(* சிவபெருமான் பிள்ளைக் கறி கேட்டது இத்தலத்தில்தான்)

என்காதல் மாலைமுடி ஆறுமுகவா அமரர் பெருமாளே.... என்னுடைய நேசத்தால் ஆனதாகிய இப்பாமாலையைச் சூடியருளும் ஆறுமுகனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

அலங்கார ரூபனே!  மயில் வாகனனே!  போற்றி போற்றி. கந்தனே!  குமரனே!  சிவனுக்குக் குருவே! போற்றி போற்றி. குங்குமம் அணிந்தள்ள உமாதேவியின் திருக்குமரான அமைந்தவனே!  போற்றி போற்றி.  ஜோதி சுடர்கின்ற கதிர்வேலனே!  போற்றி போற்றி.  எலும்பு மாலைகளை அணிந்தவரும் சடாமுடியைத் தாங்குபவருமான சிவபிரானின் குருவாக அமைந்தவனே!  போற்றி போற்றி என்றெல்லாம் வெற்றி முழக்கங்கள் கடலொலிபோல ஒலிக்க; வலிமை மிக்க சூரபத்மன் முதலானோரும்; கடலும்; கிரெளஞ்ச மலையும் தூளாகும்படிக் கூர்மையான வேலை வீசிய முருகனே!  இனிமையான வேதத்தை ஓதியவனான பிரமன் விழும்படியாக அவனை மோதியும் (குட்டியும்); ஒப்பற்ற பெண்ணான வள்ளியம்மைமேல் கொண்ட காதலால் அவரிருக்கும் தினைப்புனத்துக்குச் சென்று, அவருடைய தேன்போன்ற இனிதான மார்பகத்திலிருந்து அகற்றாத கையை உடையவனே!  அழகிய மார்பனே!  எட்டுத் தோள்களைக் கொண்ட சிவபிரான் பிள்ளைக் கறி உண்ணும் விருப்பத்தோடு வந்ததான திருச்செங்காட்டங்குடி என்ற தலத்தை அடைந்து, அங்கே மயிலின்மேலே வீற்றிருக்கும் கோலத்தில், நான் அன்போடு புனைந்த பாமாலைகளைச் சூடியருளும் ஆறுமுகனே!  தேவர்கள் பெருமாளே!

மார்பில் அணிந்துள்ள பொன் மாலைகளும், பெரிய கொங்கைகளும் அசைய; பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலும்; மணிமாலையும் தோள்களில் புரள; சூரியனைப் போல ஒளிவிடும் காதணி காதுகளில் சுடர; குமுத மலரைப் போன்ற உதடுகளும்; வானவில்லைப் போன்ற நெற்றியும்; வாளையும் வேலையும் போன்ற கண்களும்; ஆசைக் கிளியைப் போன்ற பேச்சும் கொண்டு, வருபவர்களை ‘வாருங்கள், இருங்கள், நீங்கள் எமக்கு உறவினர்கள் அல்லரா’ என்றெல்லாம் பேசி ஆசை மயக்கத்தை உண்டாக்கும் பெண்களோடும்; அவர்களோடு கூடிக் களிப்பவர்களோடும்; குடியைக் கெடுப்பவர்களோடும்; அலங்காரத் தோளினரோடும்; பணத்தாசை கொண்டவர்களோடும்; எந்தவிதமான வேற்றுமையும் இல்லாமல் சகலரோடும் உறவாடும் சண்டாளர்களோடும் அடியேன் அவர்களுடைய மாயவலையில் சிக்கித் திரியாமல், யோக நிலையைப் பூண்டு, அதனால் கிடைப்பதான பத்துவிதமான நாதங்களை அனுபவித்து, மாயையாகிய இருளை வென்று நிற்கும்படியாக மூலாக்கினி வீசும் உபதேசத்தை என் செவி குளிரும்படியாக ஓதி, உன் பாதமலர்களைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.