பகுதி - 374
மனிதர்களைப் பாடுவது முற்றிலும் தவறான
மிகப்பெரிய, அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தாலும் மனிதர்களைப் பாடி வீணே அழியாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிய பாடலை நேற்று பார்த்தோம். மனிதர்களைப் பாடுவது முற்றிலும் தவறான ஒன்று என்பதல்ல; வீணர்களையும் வஞ்சர்களையும் பொய்யாகப் புகழ்வதையே குருநாதர் கண்டிக்கிறார். திருப்புகழ் பாக்களில் அருணகிரிநாதரால் புகழப்படும் மனிதர் மூவர். இவர்களில் ஒருவரான கலிசைச் சேவகனாரைப் புகழ்ந்து பாடிய ‘சீறல் அசடன்’ என்ற பாடலை நம்முடைய 308ம் தவணையில் பார்த்தோம். பிரபுடதேவ மாராசன் இவர்களிலே இரண்டாமவர். மூன்றாமவரான சோமநாதன் என்பவரைப் புகழ்ந்து பாடியுள்ள ‘சோமநாதன் மட’த்துப் பாடலை இன்று பார்க்கிறோம்.
சோமநாதன் என்பவர் அண்ணாமலையைத் தம் ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு வழிபட்டவர்; அமணர் குலகாலனாக விளங்கியவர்; வட ஆற்காட்டிலுள்ள ஆரணி வட்டத்திலுள்ள ‘புத்தூர்’ என்னும் தலத்தில் இருக்கும் தமக்குரிய ‘சோமநாதன் மடத்தில்’ முருகவேளை வழிபட்டு வந்தார். இந்த அன்பருடைய பணியில் பெரிதும் ஈடுபட்ட குருநாதர் அடியார் சோமநாதனையும் அவர் மடத்திலுள்ள முருகனையும் சிறப்பித்துப் பாடியதே இப்பாடல். மௌன உபதேசத்தைக் கோருகிறது. ‘மோன உரையில் உபதேச வாளை’ அருள்வாய் என்று கேட்கிறது. ‘மௌன உபதேசம் என்னும் வாள்’ என்ற அருமையான பிரயோகம் சிந்திக்கத் தக்கது. இதில் சொல்லப்படுகிற ‘அருணகிரி நாதர் பூசை’ என்பது குருநாதர் தன்னைக் குறித்துக்கொள்வதன்று; அருணாசல மூர்த்தியைக் குறிகிறார். ‘சூரனை சம்ஹரித்து, மேருவைக் கலங்கச் செய்து, கடலை வற்றடித்து கடலிலுள்ள மீன் இனங்கள் வெந்து போகுமாறு கோபம் கொள்ளும் இந்த முருகன்தான் அடியார்கள் ஆயிரம்கோடிக் குறைகளைச் சொன்னாலும் (ஆண்டவனையே குறை சொன்னாலும்) கோபிக்க அறியாத கருணையான் என்று இறைவனைக் கடைசி அடியில் வாழ்த்துகிறார்.
அடிக்கு ஒற்றுநீக்கி 31 எழுத்துகள்; 6, 8, 15, 17, 24, 25 ஆகிய எழுத்துகள் மட்டும் நெடில், மற்ற அனைத்து எழுத்துகளும் குறில். ஆங்காங்கே சில இடையின ஒற்றுகள் பயில்கின்றன. ஓசையைச் சிதைக்காத வகையில் ஓரிரு மெல்லொற்றுகள் உள்ளன. வல்லொற்று இல்லை.
Advertisement
தனதனன தான தான தனதனன தான தான
தனதனன தான தான தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக - அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு - அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச - கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர நீயும் - அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும் - அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோமநாதன் - மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக - முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர் - பெருமாளே.