பகுதி - 358
கடைசிக் காலத்துக்கு ஒரு பொருளும் துணைக்கு வராது
பிறருக்குப் பகிர்ந்தளித்தல், தானத்தைக் கைக்கொள்ளல் என்ற அறத்தை நெடுகிலும் போற்றியவர் அருணகிரிநாதர்.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
என்றார் கந்தரலங்காரத்தில். ‘கூர்மையுடன் பிராகசிக்கின்ற வடிவேலனை வாழ்த்தி, உண்ணும் உணவில் ஒரேயொரு நொய்யரிசியையாவது வறியோர்க்குப் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். இதுவோ, வெய்யிலுக்கு ஒதுங்க நிழலும் தரமுடியாத உடல். இந்த உடலைச் சுமந்துகொண்டு பொருளாசை கொண்டு திரிதல் வேண்டாம்; கடைசிக் காலத்துக்கு ஒரு பொருளும் துணைக்கு வராது’ என்று ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ என்ற பட்டினத்தாரின் பாடலை ஒத்த கருத்தைப் பல இடங்களில் வலியுறுத்துவார். அதைத்தான் இன்றைய பாடலிலும் காண்கிறோம். எளிய சந்த அமைப்பு; சிறிய பாடல்.
Advertisement
இந்தப் பாடல் திலதைப்பதி என்ற தலத்துக்கானது. தற்காலத்தில் ‘கோயிற்பத்து’ என்ற பெயரில் வழங்கப்படும் இத்தம், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது; தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஊர் இது.
தனனத் தனனா தனதான
இறையத் தனையோ அதுதானும்
இலையிட் டுணலேய் தருகாலம்
அறையிற் பெரிதா மலமாயை
அலையப் படுமா றினியாமோ
மறையத் தனைமா சிறைசாலை
வழியுய்த் துயர்வா னுறுதேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே.