பகுதி - 361
பாவத்தால் ஏற்பட்டதான இந்த உடலோடு மல்லுக்கு நிற்கும் பாவியாகிய நான்
பதச் சேதம் | சொற் பொருள் |
பாதகமான யாக்கை வாது செய் பாவி கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை Advertisement
| பாதகமான யாக்கை: பாவத்தால் உண்டானதான உடல்; வாதுசெய்: வாதாடுகின்ற, போராடுகின்ற; கோத்த பாணம்: வில்லிலே பூட்டப்பட்ட அம்பு; |
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும்
| பார: கனமான; படீரம்: சந்தன(ம் பூசப்பட்ட); மா: அழகிய; பயோதரம்: மார்பகம்; பாயல்: படுக்கை; அணாப்(புதல்): ஏய்த்தல், ஏமாற்றுதல்; இதம் ஆடும்: இனிமையைக் காட்டும்; |
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்) தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
| தோதகம்: வஞ்சகம்; போதகம்: உபதேசமாக; தூய்மையில்: தூய்மை இல்லாத; |
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லா சுக உதய ஞான வார்த்தை அருள்வாயே
| அனாதி: ஆதியற்ற, தொடக்கம் இல்லாத; நீத்த(ம்): வெள்ளம்—ஆகவே பெருகுகின்ற; |
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி
| சாதன வேத நூல்: வேதநூல் சாதன—பயிற்சி—உள்ள; பூணநூல்: பூணூல்; ப்ராஜாபதி: பிரமன்; ஆண்மை தோற்க: தைரியம் குலைய; வரை: மலை, கிரெளஞ்சம்; |
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி
| சாகர(ம்): கடல்; ப்ராதப: புகழுடைய; மகீப: அரசனே (மகி: பூமி, மகீபன்: அரசன்); நேமி: சக்கர(த்தை யுடைய); |
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப
| மாதுபூத்த பாகர்: இடதுபுறத்தில் தேவி பூத்துப் பொலியும் உமைபங்கினர்; அநேக நாட்ட: பல கண்களையுடைய; வாசவன்: இந்திரன்; மறை: வேதத்தாலும்; நீப(ம்): கடப்ப மலர்; |
மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே.
| யானையை மாலை சூட்டி: தேவானையை மணந்து; |
பாதகமான யாக்கை வாது செய் பாவி ... பாவத்தால் விளைந்ததான இந்த உடலோடு வாதிட்டுப் போராடும் பாவியாகிய நான்,
கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை பார படீரம் மாப் பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும் ... வில்லிலே கோத்துத் (தயாராக இருக்கும்) அம்பைப் போலவும்; வாளைப் போலவுமான இரண்டு கண்களையும்; கனமானதும், சந்தனக் குழம்பைப் பூசியதும் அழகானதுமான மார்பகங்களை உடைய பெண்களோடு படுக்கையில் பொருநதியிருந்து, இனிமையானதைப் போல ஏமாற்(றுபவர்களுடைய),
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு(ம்) தூய்மையில் நாயினேற்கும் வினை தீர ... நயவஞ்சகமான சொற்களை உபதேசமொழியாக எண்ணுபவனும்; பரிசுத்தமற்றவனும்; நாயைப் போன்றவனுமான அடியேனுடைய வினைகள்கூட ஒழிந்துபோகுமாறு,
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இ(ல்)லாச் சுக உதய ஞான வார்த்தை அருள்வாயே ... பொருந்தியதும்; தொடக்கம் இல்லாததும்; பெருகும் தன்மையை உடையதுமான யான், தான் என்பவை இல்லாத; சுகத்தைத் தோற்றுவிக்கின்ற ஞானமொழியை உபதேசித்து அருளவேண்டும்.
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி... வேதநூலிலே ஆழ்ந்த பயிற்சியுடையவனும்; புராதனனும்; பூணூல் அணிந்தவனுமான பிரமனுடைய தைரியத்தைக் குலைத்தும்; கிரவுஞ்ச மலையைத் துகளடித்தும்;
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என ... ‘கடலிலே (மாமரமாக நின்ற) சூரனை வேட்டையாடிய வீரவேலையுடையவனே! புகழ்வாய்ந்தவனே! அரசனே! போற்றி போற்றி’ என்று
நேமி மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப மா மலர் தூவி வாழ்த்த ... சக்ராயுதத்தை ஏந்துகின்ற திருமாலும்; இடது பக்கத்திலே உமையம்மை பூத்துப் பொலிந்திருக்கும் சிவனும்; பல கண்களை உடைய இந்திரனும் (தங்களைக்) காப்பதற்காக வேதங்களை ஓதித் துதித்தும், கடம்ப மலரைத் தூவியும் உன்னை வாழ்த்த,
(மாதுபூத்த பாகர் என்ற பிரயோகத்தின் அழகு நோக்கத்தக்கது)
யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே. ... தேவசேனையை மணம்புரிந்துகொண்டு, தேவர்களின் சேனையைக் காத்த பெருமாளே!
சுருக்க உரை
‘வேதநூற் பயிற்சியுள்ளவனும்; புராதனனும்; பூணூல் அணிந்தவனுமான பிரமனுடைய (அகந்தையால் விளைந்த) தைரியத்தைக் குலைத்தும்; கிரவுஞ்ச மலையைத் தூளடித்தும்; கடலில் மாமரமாக நின்ற சூரபத்மனை வேட்டையாடியும்; வீரவேலை ஏந்தியும் நிற்கும் கீர்த்திமானே! அரசனே! போற்றி போற்றி’ என்று சக்ராயுதத்தை ஏந்தும் திருமாலும்; இடப்பாகத்தில் மங்கை பூத்தும் பொலியும் சிவனாரும்; ஆயிரம் கண்களை உடைய இந்திரனும் தம்மைக் காக்குமாறு வேதங்களை ஓதியும் கடப்ப மலரைத் தூவியும் வாழ்த்துகின்றவனே! தேவசேனையை மணந்தவனே! தேவர்களுடைய சேனையைக் காத்த பெருமாளே!
பாவத்தால் ஏற்பட்டதான இந்த உடலோடு மல்லுக்கு நிற்கும் பாவியாகிய நான், வில்லிலே கோத்த அம்பைப் போன்றதும், வாளை ஒத்ததுமான கண்களையும்; கனமானவையும் சந்தனக் குழம்பு பூசப்பட்டவையுமான மார்பகங்களையுடைய மாதர்களோடு படுக்கையில் இருக்க; அவர்கள் எனக்கு இனிமையானவற்றை அளிப்பது போல ஏமாற்ற; அவர்களுடைய வஞ்சகமான பேச்சுகளை உபதேச மொழிகளாகக் கருதுபவனானவனும்; பரிசுத்தமற்றவனும்; நாயைப் போன்றவனுமான அடியேனுடைய வினைகளும்கூட அழிந்துபோகுமாறு,
சூழ்ந்து பொருந்தியதும்; தொடக்கமற்றதும்; பெருகும் தன்மையை உடையதுமான ‘நான், தான்’ என்ற தன்மைகள் இல்லாத; சுகத்தைத் தோற்றுவிப்பதான ஞான மொழியை உபதேசித்து அருளவேண்டும்.