முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(24.04.1948)நிஜாமில் ஆட்சி செய்வது யார்? ஹைதராபாத்துக்கு நேரு கடும் எச்சரிக்கை

பம்பாயில் நடைபெறும் அ.இ.காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

பம்பாயில் நடைபெறும் அ.இ.காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பம்பாய் காந்தி நகரில் அ.இ.காங்கிரஸ் கமிட்டியின் முக்கியமான கூட்டம், ராஷ்டிரபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் தொடங்கியது.

ராஜேந்திர பிரசாத் பேசியதாவது:

Advertisement

அதிகாரம் மக்கள் கையில் வந்திருக்கிறபடியால், சர்க்கார் தனது பல சிக்கலான பிரச்னைகளை சமாளிப்பதில் அத்துடன் ஒத்துழைக்க வேண்டும். சர்க்கார் மீது அநாவசியமான கண்டனங்களை சுமத்துவதற்குப் பதிலாக உருப்படியான யோசனைகள் கூற வேண்டும்.

அகதிகளின் கஷ்ட நிவாரணத்தில் சர்க்கார் தனது சக்திக்கு எட்டியவரை முழு பிரயாசை எடுத்துவருவதாகவும் அவ்விஷயத்தில் பொதுஜனங்களும் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும்.

காங்கிரஸில் இருந்து சிலர் (சோஷலிஸ்டுகள்) விலகியிருப்பது வருத்தத்தக்கதாயினும் அது தீமையாக அல்லாமல் நன்மையாக அமைய வேண்டும்.

மகாத்மாஜி நம்மிடையே ஏற்படுத்திய ஐக்கிய பாவத்தையும் மறந்துவிடலாகாது என்று அவர் வற்புறுத்தினார்.

பண்டித நேரு பேசியதாவது:

எந்த திருஷ்டியில் நோக்கினாலும் ஹைதராபாத் இந்தியாவுடனே சேர வேண்டும். யுத்தமா? யூனியன் பிரவேசமா? என்பதே கேள்வி. யுத்தம் செய்வதானால் பல புதிய பிரச்னைகள் எழும். ஆகவே, சமரசம் பேசுகிறோம். ஆனால் யுத்தத்துக்கு பயப்படுகிறோமென்று அதன் அர்த்தமல்ல.

ஹைதராபாத்தில் குறிப்பிட்ட நபர்களின் எதேச்சாதிகார ஆட்சி இனி அஸாத்யம். பூர்ண பொறுப்பாட்சி ஏற்படுத்தியே தீர வேண்டும்.

இத்திஹாதுல் முஸ்லிமின் (ஹைதராபாத் முஸ்லிம் பாஸிஸ்டு ஸ்தாபனம்) அதன் தொண்டர் படையாகிய ரஜாக்கர், அவர்களின் தலைவர் ரஜ்வி ஆகியோர்களின் நடவடிக்கையை அவர் பிரஸ்தாபித்து சொன்னதாவது -

ரஜாக்கர் தலைவரின் அறிக்கைகள் அக்கம் பக்கத்து சர்க்காருடன் (இந்திய சர்க்கார்) நேசப்பான்மைக்கு விரோதமான செய்கை. ஹைதராபாத்தில் ஆட்சி செய்வது யார்? ரஜாக்கர்களா? அல்லது நிஜாமா? ரஜாக்கர் தலைவரின் நடவடிக்கையை நிஜாம் அங்கீகரிக்கிறாரா? அதை நிஜாம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதை அனுமதிப்பதில் இருந்து மற்றொரு பிரச்னை எழுகிறது. அவர்களை அடக்க நிஜாம் சர்க்காரிடம் சக்தியில்லையா? சர்க்கார் உயிருடன் இருக்கிறதா? அல்லது ஹைதராபாத்தில் திரை மறைவிலிருந்து வேறொரு சர்க்கார் வேலை செய்கிறதா?

எல்லா சம்பவம் பற்றி நாங்கள் கவனித்துத்தான் வருகிறோம். ரஜாக்கர் நடவடிக்கைகளுக்கு நிஜாம் சர்க்கார் உடந்தையாக இருப்பின் அதன் செய்கையை நம் எதிரியின் செய்கையாக கருதுவோம் என்றார்.

காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா.வின் தீர்ப்பு நமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தூது கோஷ்டியினர் இந்தியா திரும்பியதும் அது பற்றி சர்க்காரின் மேற்கொண்டு நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

அயல்நாட்டுப் பிரச்னையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சமரஸம் ஏற்படுத்த இந்தியா முயலுமென்றார்.

சர்தார் படேல் அனுப்பிய செய்தியில், ஹைதராபாத் நிலைமையை உடனுக்குடன் ஜாக்கிரதையாக கவனித்து வருவதாகவும் சர்க்காரை நம்பி சிறிது காலம் பொறுமையுடன் இருக்கும்படியும் கௌரவமான திருப்திகரமான பரிகாரத்துக்கு குறைவாக எதையும் இந்திய சர்க்கார் ஒப்புக்கொள்ளாதென்றும் உறுதியுடன் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments