முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(06.06.1995)வோட்டுக்காக மதம், சாதி, மொழி, பிராந்திய வெறிகளை அரசியல்வாதிகள் தூண்டிவிடுகின்றனர் - டி.என்.சேஷன் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள், வோட்டுக்காக மதம், சாதி, மொழி, பிராந்திய வெறிகளை தூண்டிவிடுகின்றனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

அரசியல்வாதிகள், வோட்டுக்காக மதம், சாதி, மொழி, பிராந்திய வெறிகளை தூண்டி விடுகின்றனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

தில்லியில், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைக் கூட்டத்தில் அவர் பேசினார்.

ஊழலில் திளைக்கும் மனோபாவத்தால் இந் நாட்டின் அதிகாரவர்க்கம் முதுகெலும்பு ஒடிந்துகிடக்கிறது. அரசியல்வாதிகளின் சொல்படி ஆடிக்கொண்டிருக்கிறது. அரசியல் வாதிகளின் கூற்றுக்குக் கீழ்ப்படிவதில் அவர்கள் எல்லை தாண்டிச் சென்றுவிட்டனர். அவர்கள் கூறுவது தவறாக இருந்தாலும், அதுபற்றி அதிகாரவர்க்கம் கவலைப்படுவதில்லை.

Advertisement

அரசியல் கட்சிகள் அனைத்தும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. அரசியல் களத்தில் நாளும் பொழுதும் ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரித் தூற்றிக்கொண்டிருந்தவர்கள், தேர்தலில் வோட்டுப் பிடிப்பதற்காகக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

வோட்டுக்காக மதம், சாதி, மொழி, பிராந்திய வெறிகளை அரசியல்வாதிகள் தூண்டி விடுகின்றனர். பஞ்சம் பட்டினி ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை.

அந்த அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு அதிகாரவர்க்கம் அடிபணிந்து கிடக்கிறது. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் வியாபித்துவிட்டது. அதிகாரத்தின் உயர்நிலையிலிருந்து கீழ்நிலை வரை ஊழல் பரவியுள்ளது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கொள்கைகளைக் கண்மூடித்தனமாகக் கடைப் பிடித்தால், அது நம்மை எங்கு கொண்டுபோய் விடும் என்பதைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது. நாடு நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு உணர்ச்சியற்றவர்களாக மக்கள் இருக்கக்கூடாது. அது தற்கொலைக்கு ஒப்பாகிவிடும். நமது பாவங்களால் எதிர்காலச் சந்ததி துயரத்தைச் சந்திக்கவேண்டி வரும் என்று சேஷன் எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments