இந்த நாளில் அன்று(18.06.1958)ஆறு வயதுப் பிள்ளை பெற்ற பிள்ளை: லட்சுமணபுரியில் அதிசயம்
ஆறு வயதுப் பிள்ளை அவன் பின்புறத்தில் ஒரு சிசுவைத் தாங்கிக்கொண்டிருந்த அதிசயத்தை, ரண சிகிச்சையின்போது ஒரு டாக்டர் கண்டுபிடித்தார்.
ஆறு வயதுப் பிள்ளை அவன் பின்புறத்தில் ஒரு சிசுவைத் தாங்கிக்கொண்டிருந்த அதிசயத்தை, ரண சிகிச்சையின்போது ஒரு டாக்டர் கண்டுபிடித்தார்.
ஒரிஸா மாநிலம் பலராம்பூர் ஆஸ்பத்திரிக்கு ஆறு வயதுக் குழந்தையைக் கொண்டு வந்தனர். அவன் புட்டத்தில் கால்பந்து அளவு பெரிய கட்டியொன்று இருந்தது. குழந்தை பிறந்தபோது சிறிய கட்டியாக இருந்ததென்றும், குழந்தை வளர வளர கட்டியும் வளர்ந்ததென்றும் பிள்ளையின் பெற்றோர் டாக்டரிடம் சொன்னார்கள்.
பின்பு அப்பையனுக்கு எக்ஸ்ரே வைத்து சோதித்தபோது கட்டிக்குள் ஏதோ எலும்புக்கூடு தென்பட்டது. இதுவும் விந்தையாக இருந்தது. டாக்டர் ரண சிகிச்சைக்காக கத்தியை வைத்தார். அதிலும் அதிசயம் காத்திருந்தது. கட்டிக்குள் நன்கு அமைந்த சிசுவின் கரு இருந்தது. மண்டை, முதுகெலும்பு எல்லாம் வளர்ந்திருந்தது. அவற்றையெல்லாம் எடுக்க இரண்டு நீண்ட ஆபரேஷன்கள் செய்யவேண்டி இருந்தது. கடைசியில் கட்டி கரைந்தது. சிறுவன் தொந்தரவின்றி வீடு சேர்ந்தான்.
Advertisement
பின்பு டாக்டர் கூறியதாவது -
இம்மாதிரி காண்பது இதுதான் முதல் தடவை. சாதாரணமாக இரட்டைப் பிள்ளைகள் சமமாக வளர்ந்திருப்பது வழக்கம். ஒரே சமயத்தில் தனித்தனியாகப் பிறந்து வளர்ந்து உயிர் வாழ்வது இயற்கை. சில சமயம் இரட்டைப் பிள்ளைகள் புட்டத்தில் ஒட்டிக்கொண்டு பிறக்கும். இவை உயிர் தரிப்பது அரிது. இப்போது ஆபரேஷன் செய்த இரட்டைப் பிள்ளை விஷயத்தில் ஒரு குழந்தை முழு அளவுக்கு வளர்ந்திருக்க, மற்றொன்று புட்டத்தில் அரைகுறையாக இருந்தது. ஆயினும், பெரிய குழந்தையிடமிருந்து ரத்தம் பரவிக்கொண்டிருந்ததால் இந்த ஆறு வருஷமாக அக் கருவும் வளர்ந்துகொண்டிருந்தது.