இந்த நாளில் அன்று(05.05.1963)சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அனுமதிக்க முடியாது - தக்கர் பாபா சிலையைத் திறந்துவைத்து நேரு உரை
மக்கள் இடையே பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஜனநாயகத்திலும், சோஷலிஸ அமைப்பிலும் இருக்க அனுமதிக்க முடியாது என்று பிரதமர் நேரு கூறினார்.
மக்கள் இடையே பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஜனநாயகத்திலும், சோஷலிஸ அமைப்பிலும் இருக்க அனுமதிக்க முடியாது என்று பிரதமர் நேரு கூறினார்.
ஹரிஜன சேவா சங்க ஸ்தாபகரான தக்கர் பாபாவின் சிலையை திறந்து வைத்து நேரு பேசினார். எல்லா மக்களையும் பொருளாதார சமூக ரீதியில் சமமான அடிப்படையில் கொண்டு வருவது சிரமம் என்றாலும், சோஷலிஸ பாணி சமூகத்தில் வேறுபாடுகளைக் குறைந்தபட்சமாக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது -
Advertisement
சிலர் ஏழையாக அல்லது தாழ்ந்த ஜாதியில் இருப்பதனால் துன்புறுத்தப்பட்டால் சுயராஜ்யத்துக்கு அர்த்தமில்லை. இது நமது நோக்கத்துக்கும், கொள்கைக்கும் எதிரிடையானது. வேறு சூழ்நிலையின் கீழ் பழைய காலத்தில் என்ன நேர்ந்திருந்தாலும் நவீன உலகில் அது நீடிக்கமுடியாது. அது நீடித்தால் தேசம் சீர்கெடும். தேசத்தின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல் பெரிய தொழிற்சாலைகள் அல்லது கட்டடங்கள் அல்ல; தேச மக்கள் வாழும் நிலையாகும்.
ஹரிஜனங்கள் இப்பொழுது நன்கு நடத்தப்படுகிறார்கள். ஆனால், உயர் வகுப்பு மக்களின் உள்ளம் மாறும் வரை, மாறினால் அன்றி ஹரிஜன முன்னேற்றப் பணியை முற்றிலும் நிறைவேற்ற முடியாது. ஹரிஜனங்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். உயர் பதவிகளை வகிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு மதிப்பு ஏற்படும். மற்றவர்களின் கருணையின் கீழ் யாரும் உயர் நிலைக்கு வர முடியாது. தங்கள் சொந்த பலம், முயற்சி மூலம் அவர்கள் தக்க அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், சர்க்கார் உத்தியோகங்களிலும் வேலை செய்பவர்கள், தேச சேவை செய்கிறார்கள். அவர்கள் ஊதியத்துக்காக மட்டும் உழைக்கக்கூடாது. தேசப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக அவர்கள் உற்பத்தியைப் பெருக்க முயற்சிக்க வேண்டும். ஜாதி முறையில் நம்பிக்கை வைத்திருப்போரும், தாழ்ந்த நிலையில் உள்ளோரின் கல்வி, மற்ற வாய்ப்புகளுக்குக் குறுக்கே இருப்போரும் இப்பணியைக் கெடுக்கிறார்கள்.
ஆக்க வேலையில் ஈடுபட்ட தேசத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவர் ஸ்ரீ தக்கர் பாபா. அவருடைய சிலை மக்களுக்கு தொடர்ந்து உத்வேகமளிக்கும்.