இந்த நாளில் அன்று(08.05.1966)தேர்தலில் ஒழுக்கம், திறமைக்கு மதிப்பு தர வேண்டும்; மதிப்பு தராததே இன்றைய ஒழுங்கின்மைக்கு காரணம் - ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் உரை
சட்டசபைகளுக்கும், இதர பொது ஸ்தானங்களுக்கும் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறநெறி தூய்மையும், நல்லொழுக்கத்தையும் திறமையையும் கவனிக்க வேண்டும் என்பதை ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சட்டசபைகளுக்கும், இதர பொது ஸ்தானங்களுக்கும் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறநெறி தூய்மையும், நல்லொழுக்கத்தையும் திறமையையும் கவனிக்க வேண்டும் என்பதை ராஷ்டிரபதி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
கோபாலகிருஷ்ண கோகலேயின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு அவர் ரேடியோ மூலம் நிகழ்த்திய பிரசங்கத்தில் அவர் இதை வலியுறுத்தினார்.
இன்று சட்டசபைகளுக்கும் இதர பொது ஸ்தாபனங்களுக்கும் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுப்பதில் அற நெறித் தூய்மையை நாம் வற்புறுத்துவதாகத் தோன்றவில்லை. சமயத்தையும் வகுப்பையும் கவனிக்கிறோமேயொழிய, நல்லொழுக்கத்தையும் திறமையையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. நாட்டில் உள்ள ஒழுங்கின்மைக்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.
Advertisement
49 வயதிலேயே கோகலே காலமானார் என்றாலும், இந்நாட்டின் பொது வாழ்வில் அவர் மிக முக்கியமான செயல் விளைவை ஏற்படுத்தியிருக்கிறார். நமது நாட்டின் மரபுக்களுக்குக்கேற்க, கோகலே பொது வாழ்வில் பற்றற்ற நிலை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த உலகில் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் பயம் நிறைந்திருக்கிறது. பற்றற்ற நிலை மட்டும்தான் அச்சமின்மையை தோற்றுவிக்கிறது. உலகில் உள்ள சுக சௌகரியங்களை கோகலே அடைந்திருக்க முடியும். அவற்றை அனுபவித்திருக்க முடியும். அப்படியிருந்தும் அவர் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமது மகத்தான திறமைகளை நாட்டின் சேவைக்காகப் பயன்படுத்தினார்.
பற்றற்ற நிலைதான் சிறந்த வாழ்க்கையின் அடிப்படை நெறி. தாங்கள் பெறுவதை வைத்துக்கொண்டு மனிதர்கள் சிறந்தவர்களாக முடியாது. எதை எதைக் கைவிடுகிறார்களோ அதை வைத்துக்கொண்டு சிறந்தவர்களாக முடியும். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் அதை கவர்ச்சிமிக்க பலன்கள் கிட்டும் வாழ்க்கையாகக் கருதக்கூடாது.
அரசியல் வாழ்வை ஆத்மீகமாக்க வேண்டும். உள்ளத்தில் தேசப்பற்று நிறைந்திருக்க வேண்டும். அதனருகே வேறு எல்லாம் மதிப்பற்றதாய்க் காட்சிதர வேண்டும். தாய்நாட்டுக்காகத் தியாகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உவகை கொள்ளும் ஆழ்ந்த்த தேசபக்தி, சிரமம் நேர்ந்தாலும் ஆபத்து ஏற்பட்டாலும் லட்சியத்தில் இருந்து ஒருபோதும் மாறாத எதையும் தாங்கும் இதயம், ஆண்டவனிடத்தில் அசையா நம்பிக்கை ஆகியவற்றுடன் ஊழியர்கள் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். நாட்டின் சேவைக்காக நம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்வதில் பேரானந்தத்தைக் காண வேண்டும் என்று கோகலே கருதினார். கோகலேயை காந்திஜி தமது அரசியல் குருவாக வரித்ததில் ஆச்சரியம் இல்லை.
வாழ்க்கை என்பது முழுமையான ஒன்று. அரசியல் முன்னேற்றத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் பிரிக்க முடியாது. வாழ்க்கையை பிரிவுகளாக வகுக்க முடியாது. கோகலேயைப்போல், ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டோரிடமும் பரிவு காட்ட வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.