இந்த நாளில் அன்று(12.05.1970)கோவை விவசாயிகள் கிளர்ச்சி; வன்முறைச் செயல்களை அரசு அனுமதிக்காது - முதல்வர் கருணாநிதி கண்டிப்பு
கோயமுத்தூர் ஜில்லாவில் எல்லா கிணறுகளுக்கும் மின்சாரக் கட்டணச் சலுகையை விஸ்தரிக்க வேண்டும் என்று கோரி வன்முறை கிளர்ச்சிகளில் ஈடுபடுவதை தம்முடைய சர்க்கார் அனுமதிக்காது என்று தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்.
கோயமுத்தூர் ஜில்லாவில் எல்லா கிணறுகளுக்கும் மின்சாரக் கட்டணச் சலுகையை விஸ்தரிக்க வேண்டும் என்று கோரி வன்முறை கிளர்ச்சிகளில் ஈடுபடுவதை தம்முடைய சர்க்கார் அனுமதிக்காது என்று தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கோயமுத்தூர் ஜில்லா விவசாயிகள் சங்கச் செயலாளர் நாராயணசாமி தமக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தைக் குறிப்பிட்டு அக்கடிதத்தில் நக்ஸலைட் பாணியில் எச்சரிக்கை விடுத்திருப்பது வேதனையும் வியப்பும் தருவதாகக் கூறியுள்ளார்.
Advertisement
75 அடிக்கு மேல் ஆழம் உள்ள கிணறுகளுக்கு மின்சார கட்டணம் 10 பைசா என்பது 9 பைசா என்று குறைத்து கட்டணச் சலுகை வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் தம்முடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சலுகையால் கோவை ஜில்லாவில் 85 சதவீத கிணறுகள் பயன்பெற்றிருப்பதாகவும் 15 சதவீத கிணறுகளுக்குத்தான் இச்சலுகை கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதை நாராயணசாமியே தம்முடைய கடிதத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது -
அப்படி குறிப்பிட்டிருக்கிற நாராயணசாமி, மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகளிடம் மின்சாரத் துண்டிப்பு செய்வதாக மின்சார இலாகா அறிவித்திருப்பது வருந்தத்தக்கது என்று கூறிவிட்டு, மின்சாரத் துண்டிப்பு அறிவிப்பு விவசாயிகளின் பொறுமையைச் சோதிப்பதாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டிவிட்டு, கலவரம், வன்முறைச் செயல்கள் ஏற்பட்டால்தான் பிரச்னைக்கு சர்க்கார் செவி சாய்ப்பர் என்றால், விவசாயிகளும் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை வருத்தத்துடனும் அதே சமயத்தில் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால், இனிமேல் பொது மக்களுக்கும் பொது சொத்துக்கும் நஷ்டம் ஏற்படுவதுடன் வேறு பல அவல நிகழ்ச்சிகள் ஏற்பட்டால், அதற்கு சர்க்கார்தான் பொறுப்பாகும் என்பதையும் கோவை ஜில்லா விவசாயிகள் சங்கத்தின் மேல் பழி சுமத்தக்கூடாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என்பதாக அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
கிளர்ச்சியைத் தொடரும்போதே முதலமைச்சராகிய எனக்கு எழுதுகிற கடிதத்தில், நக்ஸலைட் பாணியிலேயே எச்சரிக்கை விடுத்துள்ளது வியப்பையும் வேதனையையும் தருகிறது. வன்முறைச் செயல்கள் எதனையும் இந்த சர்க்கார் அனுமதிக்காது என்பதனையும், வன்முறைகளை அடக்கி தமிழகத்தில் அமைதியை உருவாக்கச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்பதையும் நான் திட்டவட்டமாக மிகுந்த கண்டிப்புடன் அறிவித்துக்கொள்கிறேன். இப்படித் திட்டமிட்டுச் செய்யப்படும் வன்முறை கிளர்ச்சிகளுக்கு விவசாயப் பெருங்குடி மக்கள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் பொது மக்கள் ஆதரவு தர வேண்டாம் என்றும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.