இந்த நாளில் அன்று (14.05.1972)சென்னை அசோக் லேலண்டு தொழிற்சாலை மூடப்பட்டது; தொழிலாளர் தகராறே காரணம்
சென்னை அருகே உள்ள எண்ணூரில் லாரிகள், பஸ்கள் உற்பத்தி செய்யும் அசோக் லேலண்டு தொழிற்சாலையை மூடுவதென்று அதன் நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கின்றனர்.
சென்னை அருகே உள்ள எண்ணூரில் லாரிகள், பஸ்கள் உற்பத்தி செய்யும் அசோக் லேலண்டு தொழிற்சாலையை மூடுவதென்று அதன் நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கின்றனர்.
தொழிலாளர்கள் தகராறே இதற்குக் காரணம். வழக்கம் போன்ற உற்பத்திக்கும், விசுவாசமான அலுவலர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும்வரை தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும் என தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி கே.எஸ்.ராமசாமி அறிவித்திருக்கிறார்.
மூன்று மாதங்களாக இந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர் தகராறு இருந்து வந்தது. ஒரு சில வாரங்களாக இங்கு உற்பத்தியே நடைபெற்வில்லை என்று கூறலாம்.
இந்தத் தொழிற்சாலையில் 4000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சில வாரங்களாக லேஆப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தத் தொழிற்சாலையில் குசேலர் தலைமையில் உள்ள தொழிற்சங்கம், 1970-ல் அளிக்கப்பட்ட போனஸைவிட 1971-க்கு அதிக போனஸ் அளிக்க வேண்டும் என்று கோரியது. ஆனால், 1970 ஊதியத்தில் எத்தனை சதவீதம் போனஸாக அளிக்கப்பட்டதோ அதே சதவீதம்தான் 1971-க்கு போனஸாக அளிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறினார்கள்.
போன ஆண்டு கம்பெனியின் வருவாய் குறைந்திருப்பதாகவும், அப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான போனஸ் அளிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினார்கள்.
இதற்குப் பின்பு மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை நடத்துப்படி யூனியன் உத்தரவிட்டது. இதனால் சில துறைகளில் உற்பத்தி குறைந்தது. மற்ற துறைகளில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு லேஆப் கொடுக்கவேண்டியதாயிற்று. கடைசியில் கடந்த நான்கு வாரங்களாக வேலை முழுவதுமே நின்றுபோய்விட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தொழிலாளர் மந்திரி, மாநில தொழிலாளர் மந்திரி, தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தொழிற்சாலையை மூடுவதற்கு உடனடியாக ஏற்பட்ட காரணம், குசேலர் தலைமையில் உள்ள தொழிலாளர்கள், நேற்று கம்பெனியின் சூபர்வைசர்கள், நிர்வாக அதிகாரிகளைச் சுற்றி கேரோ செய்ததே என்று தெரிகிறது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தொழிற்சாலையை மூடிவிடுவதென்று நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பதாக ராமசாமி கூறினார்.
நிர்வாகத்தினருடனும் தொழிலாளர் தரப்புடனும் மாநில தொழிலாளர் கமிஷனர் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறார்.