என்னுடைய தொடர்ச்சி ஸ்ரீநிவாசன்!
தமிழ் ஸ்டுடியோவின் "லெனின் விருது வழங்கும் விழா' கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடந்தது. எடிட்டர் லெனின் பெயரில் அமைந்த விருதை, சிறந்த ஆவணப்படத்தின் இயக்குநரான
தமிழ் ஸ்டுடியோவின் "லெனின் விருது வழங்கும் விழா' கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடந்தது. எடிட்டர் லெனின் பெயரில் அமைந்த விருதை, சிறந்த ஆவணப்படத்தின் இயக்குநரான ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசனுக்கு வழங்கினார் இயக்குநர் பாலுமகேந்திரா. விழாவிலிருந்து சில துளிகள்...
தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன்,
""ஸ்ரீநிவாசனுக்கு விருது வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய முக்கியமான ஆவணப்படங்களை இந்த மேடையில் திரையிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவரைப் பற்றி நாங்கள் பேசுவதை விட அவரின் படங்கள் பேசியிருக்கும். நாங்களும் அமர்ந்து பார்த்திருப்போம். குறும்பட இயக்குநர்கள் திரைப்படம் எடுக்க வேண்டுமெனில், அதற்கேற்றவாறு தங்களின் அறிவை, சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்..'' என்றார்.
கவிஞர் தேவதேவன், ""மேடையில் பேசுவதில் எனக்கு எப்போதுமே மிகுந்த தயக்கம் உண்டு. இந்த மேடையில் நான் நிற்பதற்கு எனக்கும் ஸ்ரீநிவாசனுக்கும் இடையேயான நட்பு மட்டுமே காரணம். வாழ்வில் மெüனம் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு படைப்புக்குள் கூட கண்ணுக்குத் தெரியாத மெüனம் அமர்ந்திருக்கும். அது பார்வையாளனுடன் சில உண்மைகளைப் பேசும். ஒரு படைப்பு எந்த அளவுக்கு தன்னுள் மெüனத்தைக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கே அதனை சிறந்த படைப்பாகக் கருதுகிறேன்...'' என்றார்.
பாலுமகேந்திரா, ""ஸ்ரீநிவாசனை இதற்கு முன் சில திரையிடல்களில், கலந்துரையாடல்களில் சந்தித்திருக்கிறேன். பலமுறை என்னுடன் கோபமாய் விவாதித்திருக்கிறார். அவரின் அசலான கோபம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கோபக்கார இளைஞனுக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது என்றவுடன் போக வேண்டும் எனத் தோன்றியது. வந்துவிட்டேன்.
அண்ணாதுரையிலிருந்து தமிழகத்தை ஆண்ட அனைவருமே சினிமாக்காரர்களே... அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் நல்ல சினிமாவை பாதுகாத்து வைக்கும் ஓர் ஆவணக் காப்பகம் இல்லை. இது எவ்வளவு மோசமான ஒரு நிலைமை. நான் மிகுந்த வருத்தத்துடன், என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு விஷயம் சொல்கிறேன். என்னுடைய "வீடு', "சந்தியா ராகம்' படங்களின் நெகடிவ் வீணாகிவிட்டன. இனிமேல் அவற்றை ஒரு பிரதி கூட எடுக்கமுடியாத நிலை.
நானும் இன்னும் சிலரும் இணைந்து தமிழில் வணிகரீதியான சினிமாக்களுக்கு மாற்றாக ஒரு தளம் அமைக்க முயற்சித்து வருகிறோம். 90 நிமிடங்களில் புதிதான கதை சொல்லும் ஒரு முயற்சி. அறிவிப்பு விரைவில் வரும்...'' என்றார்.
ஏற்புரை வழங்கிய ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசனின் உரை நெகிழ்ச்சியாக அமைந்தது.
""இவ்விருதை முதலில் நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எதற்கு விருதெல்லாம்...? எனக் கூச்சத்தோடு மறுத்தேன். பின்பு நான் பெரிதும் மதிக்கும் லெனின் பெயரால் வழங்கப்படும் விருது என அறிந்ததும் மிகுந்த பயத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்..'' என்றார்.
லெனின் பெயரில் விருது கொடுக்கப்பட்டாலும் அவரை மேடையில் காணமுடியவில்லை. கூட்டத்தோடு அமைதியாக அமர்ந்திருந்தவரை விழாக்குழுவினரும் ஆர்வலர்களும் மேடையேறி பேச வற்புறுத்தினர்.
""எல்லாவற்றிலும் ஒரு தொடர்ச்சி இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்ச்சியில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். அப்படி என்னுடைய தொடர்ச்சியாக நான் ஸ்ரீநிவாசனைப் பார்க்கிறேன். "காஞ்சனை' ஆரம்பிக்கப்பட்டபோது கூட யாரும் கவனிக்கவில்லை. பத்து பேர். வெறும் பத்து பேராக நாங்கள் சேர்ந்து துவங்கிய இயக்கம். சோர்ந்து போகாமல் உழைத்தோம்.
வணிகம் என்று வரும்போதே அங்கு அறம் அடிபட்டுப் போகிறது. லாபமே எல்லாமாகிறது. எங்களுக்கு எந்த லாபமும் அங்கீகாரமும் வேண்டாம். என் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்... என் மக்களை ஏமாற்றாதே. அதுவும் இளைஞர்களை ஏமாற்றாதே... அவ்வளவுதான்.'' என்றார் லெனின்.
தமிழ் ஸ்டுடியோவின் அருண், குணா ஆகியோர் நிகழ்ச்சியை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தியிருந்தனர். நிகழ்ச்சியை ராஜசேகர் தொகுத்து வழங்கினார். யாழ் நிலவன் நன்றியுரை வழங்கினார்.