கண்ணோட்டம்

காவலருக்குத் தேவை அறிவியல் ரீதியான பயிற்சி

இந்தியா முழுவதும் அவ்வப்போது துப்பாக்கிச்சூடும் காவல்துறையின் அத்துமீறலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காவல்துறை சீர்திருத்தம் குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரிய அளவில் நடைமுறை

இளங்கோவன்

இந்தியா முழுவதும் அவ்வப்போது துப்பாக்கிச்சூடும் காவல்துறையின் அத்துமீறலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காவல்துறை சீர்திருத்தம் குறித்து பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரிய அளவில் நடைமுறை மாற்றம் ஏற்படவில்லை.

இந்திய காவல்துறையினருக்கு வன்முறைக் கூட்டத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து போதிய பயிற்சி இல்லை என்றே கூறலாம். இந்தியாவைப் பொருத்தவரை சமீபகாலமாக, பிரச்னைக்குத் தீர்வாக மக்கள் வன்முறையில் இறங்குவது என்பது வழக்கமானதாகி விட்டது. இந்தியச் சமூகம், அந்த அளவுக்கு கொந்தளிப்பு நிறைந்ததாக மாறிவிட்டிருக்கிறது என்பது உண்மை.

பொதுவாக அரசியல், மதம், சாதி, மொழி, புகழ்மிக்க தலைவர்களின் கொலை போன்ற காரணங்களால் வன்முறைக் கலவரங்கள் நிகழ்கின்றன. இவற்றில் மதம் மற்றும் சாதி சார்ந்த கலவரங்கள் மிகவும் மோசமானவை. இவைதான் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருப்பவை. சாதி, மத வேற்றுமை மனப்பான்மை காவல்துறையையும் விட்டுவைக்கவில்லை என்பதால், இப்பிரச்னையை அணுகுவதில், அத்துறையிடமே அடிப்படையில் குறை உள்ளது. இந்த உண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

ஒரு வன்முறைக் கூட்டம் என்பதற்குப் பொதுவான குணங்களாக கூறப்படுபவை எவையெனில்- அது கட்டுக்கடங்காத மக்களைக் கொண்ட, தனக்கென்று ஒரு "மனம்' கொண்டிராத சிந்தித்து செயல்படும் தன்மையற்ற, சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மனப்பான்மையையும் கொண்டதாகும். மக்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் அது அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் என்ற காரணமே பிரதானமாக இருக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் "குரல்' கேட்க வேண்டும் என்ற நோக்கில் பாதிப்புக்குள்ளானவர்கள் வன்முறை கலவரங்களில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையான உண்மையை காவல்துறையினரும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பிலுள்ளவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கலவரச்சூழலில், முதலில் உளவியல் ரீதியாகவும் வன்முறைக் கூட்டத்தைப் பாதித்திருக்கும் பிரச்னையின் கோணத்திலிருந்து அணுகுதல் என்ற அடிப்படையில் செயல்படுதல் பலனளிக்கும். மறைந்த ஒரு தலைவரின் நினைவுநாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒரு கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால்தான், பரமக்குடியில் வன்முறை நேரிட்டது என்று கூறப்படுகிறது. மேற்படி அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் அது தவிர்க்கப்பட்டிருக்கலாம். பல வன்முறை நிகழ்வுகள், திடீரென நடந்தேறிவிடுகின்றன. சில திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. உளவுத்துறை திறம்பட செயல்பட்டால், இதுகுறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இத்துறையின் செயல்பாட்டிலும் குறைகள் உள்ளன. அவற்றை நீக்கிட வேண்டும்.

கலவரக் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருக்கு அறிவியல்ரீதியான பயிற்சி அவசியம். குறிப்பாக மனித உரிமைகள் குறித்த சரியான விழிப்புணர்வும் அவற்றை மீறாது செயல்படுவதன் அவசியத்தையும் அவர்களுக்கு நன்கு உணர்த்த வேண்டும்.

கலவரத்தில் ஈடுபடுவோரெல்லாம் ஏதோ தேசத்துரோகிகள் அல்லர். கலவரத்தை அடக்குவதற்கு துப்பாக்கிச்சூடு போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிதானம் காட்ட வேண்டும். குறிப்பாக துப்பாக்கிச்சூடு குறித்த விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

அவசியம் ஏற்பட்டால் இடுப்புக்குக்கீழே மட்டும் சுட வேண்டும் என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தற்ற ரப்பர் வகை குண்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் ஒரு வித்தியாசத்தைக் கூறுவார்கள்- ""ராணுவம் சுடுவது (எதிரிகளை) கொல்லவே; காவலர்கள் சுடுவது காயம் ஏற்படுத்தவே''. இதை மனதில் கொள்ள வேண்டும்.

சட்டவிரோதமாக கூடுதல், வன்முறை, கலவரம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவை குறித்த சட்டங்கள் உள்ளன. அச் சட்டங்கள் மூலமாக சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சட்டங்களிலும் ஓட்டைகளும் குறைபாடுகளும் உள்ளன. அவற்றை போக்கிட வேண்டும். வெளிநாடுகளில் உள்ளதுபோல், வன்முறையில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அபராதம், கட்டாய புனரமைப்பு மற்றும் சமூகப்பணி போன்ற வழிமுறைகளைப் புகுத்திப் பார்க்கலாம்.

பல சமயங்களில் வன்முறையாளர்களினால் காவலர்களுக்கே காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டு அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.

எனவே வன்முறைக் கூட்டத்தினரிடமிருந்தும் காவலர்களுக்குப் பாதுகாப்பு தேவை. பல வெளிநாடுகளில் உள்ளதுபோல், தலை முதல் உடல் முழுக்கப் பாதுகாப்பாக மறைக்கக்கூடிய சிறப்பு உடையை வடிவமைத்து அவர்களுக்கு வழங்க வேண்டும். கற்களோ அல்லது வேகமாகவும் பலமாகவும் வீசி எறியப்பட்டு தாக்கக்கூடிய பொருள்கள் பட்டாலும் அவற்றால் உடலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் அந்த ஆடை இருத்தல் வேண்டும்.

மக்களாட்சி அமைப்பில், போராட்டங்களும் மக்கள் இயக்கங்களும் ஒரு பகுதியாகும். ஆனால், தேவையற்ற வன்முறை, துப்பாக்கிச்சூடு போன்ற நிகழ்வுகளினால் மக்கள் தங்களின் இன்னுயிரை இழப்பது கொடுமையிலும் கொடுமை.

மக்களாட்சி கோட்பாடுகளில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடும்படியான காரணங்கள் உண்டாகிவிடவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் உணர்வுகளையும் மனித உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும். அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கு அவர்கள் ஒரு நாள் சட்டத்தின் முன் நின்றே தீர வேண்டும். அதுதான் மக்களாட்சியின் மகிமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT