வைகையை சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து மீட்க மக்களை ஒருங்கிணைத்து இயக்கமாக நடத்த வேண்டும், என மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை பாத்திமா கல்லூரியில், சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு என்ற தலைப்பில் நான்கு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை துவங்கியது. கல்லூரி முதல்வர் ஜோஸ்பின் நிர்மலா மேரி தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பிரான்சிஸ் பாவ்லின் வாழ்த்துரை வழங்கினார். இங்கிலாந்து லான்செஸ்டர் பல்கலைக்கழகம் டேவிட் சி.நிகோலஸ் துவக்கி வைத்து பேசினார்.
கருத்தரங்கில், வைகை நதி மறுசீரமைப்பில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கு என்ற தலைப்பிலான சொற்பொழிவு நடந்தது. இதில் சென்னை தொழில்நுட்ப ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி தேசிய நிறுவன இயக்குநர் எஸ்.மோகன் பேசுகையில், தமிழ் இலக்கியங்களில் இயற்கை சூழலை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினாலே சுறறுச்சூழலை எளிதாக காக்க முடியும். அந்த வகையில் வைகை ஆற்றை காக்க வேண்டிய பொறுப்பு இப்பகுதி மக்களுக்கு உள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுத்தாலே வைகையை சீரழிவிலிருந்து காப்பாறறி விடலாம் என்றார்.
கலிபோர்னியா பீல்டிங் கிராஜூவேட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் பால்கே வில்லிஸ் பேசுகையில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரை வந்தபோது வைகை சுத்தமாக இருந்தது.
தண்ணீர் தெளிந்த நீரோடையாக காணப்பட்டது. தற்போது, வைகை மாசுபட்டு காணப்படுவதற்கு, வைகை பராமரிக்கும் அமைப்புகளில் குறைபாடு இருப்பதாகவே தெரிகிறது. கழிவுநீர் வைகையில் கலப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.சந்திரன் பேசுகையில், வைகை மாசுபடுவதை தடுக்க பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், கூடுதல் தண்ணீரை வெளியேற்றி வைகையில் சேர்க்கவும் கால்வாய்கள் இருந்தன. இன்றைக்கு அவற்றைக் காணவில்லை. இப்பிரச்னைக்கு அரசு நிர்வாகங்களை மட்டும் குறைகூறுதால் பயனில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே வைகையை மீட்க முடியும் என்றார்.
கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் சவால்களுக்கான தீர்வுகள் என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. கூடங்குளம் அணுமின்நிலைய முதுநிலை விஞ்ஞானி டேனியல் செல்லப்பா வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, கருத்தரங்க ஒருங்கிணைப்பு செயலாளர் கீதா வரவேற்றுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.